இந்தியாவைப் பொறுத்தவரை அசைவ உணவுகளில் ஆடு,கோழி மற்றும் மீன் ஆகியவை பெரும்பான்மையான மக்களால் உண்ணப்படுகிறது.
மீன்களில் நல்ல ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் அவை மிகவும் சத்து நிறைந்த உணவாக இருக்கிறது.ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு அவசியம். இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
இத்தகைய மீன்களிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. கானாங்கெளுத்தி, பாறை, சங்கரா, சுறா, கட்லா, மத்தி, திருக்கை, வவ்வால், முரல், கிழங்கான், நெத்திலி, அயிரை, கும்பலா மற்றும் சால்மன் என இதன் வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
பண்ணா மீன் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கடல் மீனில் பாஸ்பரஸ், நியாசின் மற்றும் வைட்டமின் B-12 நிறைந்து காணப்படுகிறது.
இதைப் போலவே கானாங்கெளுத்தி சாப்பிடுவதற்கு மலிவான, சுவையான மற்றும் அழகான மீன் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிறைந்துள்ளது. மத்தி மீனில் புரதச்சத்து, கொழுப்பு சத்து,சாம்பல் சத்து மற்றும் நீர்ச்சத்தும் உள்ளது. மத்தி மீன்களில் 'ஒமேகா 3' கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
ஒவ்வொரு மீனுக்கும் ஏற்றார்போல குழம்பு அல்லது வறுத்த மீனின் சுவையும் மாறுபடுகிறது. இதைப் போலவே சமைக்கும் முறைகளை கொண்டும் மாநிலத்திற்கு மாநிலம் மீன் உணவின் சுவை மாறுபடுகிறது.
இதிலும் குறிப்பாக கேரளா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஒரிசா மற்றும் தமிழகம் என கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் மீன் உணவு விரும்பி உண்ணப்படுகிறது. மாநிலத்திற்கு மாநிலம்,மீனை சமைக்கும் செய்முறை, மாறிக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, மண்சட்டியில் வைக்கப்படும் மீன் குழம்பிற்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த மீன் குழம்பு சமையலானது, புளியை அடிப்படையாக வைத்து செய்யப்படுகிறது.
சிறிது கட்டியாக கரைத்து,எடுத்துக்கொண்ட புளி, அதில் சேர்ப்பதற்கு மிளகாய் தூள், வெங்காயம்,தக்காளி மற்றும் வடகம் என இந்த சேர்மானங்களை பொறுத்து, தமிழ்நாட்டு மண்சட்டி மீன் குழம்பு,உலகம் முழுமைக்கும் புகழ்பெற்ற விளங்குகிறது. இதுவே கேரளா போன்ற மாநிலங்களில்,பொரித்த மீன் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கும்.
இதை போலவே மகாராஷ்டிராவில் கோலா பூரி மீன் சமையல் மிகவும் பிரபலமான ஒரு உணவு முறையாகும்.
முதலில், தயிருடன் மஞ்சள், மிளகாய் தூள், பூண்டு விழுது, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதில் மீனை சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அடுத்து, ஒரு கடாயை எடுத்து சிறிது எண்ணெயை சூடாக்கவும். இலவங்கப்பட்டை, கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும். தேங்காய், தக்காளி சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். முழு கலவையையும் ஒரு பிளெண்டரில் கலக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது, மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, மீன் சேர்க்கவும்.மசாலா பேஸ்ட்டைச் சேர்த்து, மீன் நன்கு வேகும் வரை குறைந்த தீயில் வதக்கி எடுத்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
ஆகவே சுவையும் சத்துக்களும் நிறைந்த மீனை வாரம் இரு முறை எடுத்துக்கொண்டு உடலை பேணி பாதுகாப்போம்.