மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் அரைக்கப்பட்டு, அந்த அரிசி மாவட்டம் முழுவதும் உள்ள 424 ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு காளைக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி ; மணிமண்டபத்தில் பூஜை நடத்திய மக்கள் !
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அரசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும், தரமான ரேஷன் அரிசி வழங்கக்கோரி பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்ந சூழலில், மயிலாடுதுறை அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து சித்தமல்லி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து பொதுமக்களுக்கு வழங்கிய அரியை சாலையில் கொட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மயிலாடுதுறை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து வருங்காலங்களில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உத்தரவாததின் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.