மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் பல்சவாடே எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. சதாரா மாவட்ட வனத்துறையின் ரேஞ்சராக பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், அந்த கர்ப்பிணி வனத்துறை அதிகாரியை ஆண் மற்றும் பெண் இருவர் இணைந்து சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலானது.






அந்த வீடியோவில் ஆண் ஒருவர் வனத்துறை அதிகாரியின் கையை முறித்து, காலால் எட்டி உதைப்பதும், அவரது தலை முடியை இழுத்து கீழே தள்ளுவதும், அந்த ஆணுடன் இணைந்து பெண் ஒருவரும் வனத்துறை அதிகாரியை தாக்கியும் உள்ளனர். பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்த இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.




கர்ப்பிணியான வனத்துறை அதிகாரியை தாக்கியது பல்சவாடே கிராமத்தின் முன்னாள் தலைவரும், அவரது மனைவியும் என்பது தெரியவந்துள்ளது. அந்த முன்னாள் தலைவர் அந்த கிராமத்தின் வனத்துறை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். வனத்துறையின் கீழ் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பெண் வனத்துறை அதிகாரி வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தன்னுடைய அனுமதி பெறாமல் ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்துச் சென்றதாக கூறி, அந்த முன்னாள் தலைவர் தனது மனைவியுடன் இணைந்து பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. அப்போது, கணவனும், மனைவியும் சேர்ந்து கர்ப்பிணியாக உள்ள பெண் என்றும் பாராமல் சரமாரியாக அவரைத் தாக்கியுள்ளனர். பெண் வனத்துறை அதிகாரி இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.






போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் தம்பதியினர் இருவரையும் கைது செய்தனர். மேலும், தாக்குதலுக்கு ஆளான வனத்துறை அதிகாரியின் கணவரும் வனத்துறையில் காவலராக பணிபுரிந்து வருவதாகவும், அந்த தம்பதியினர் தனது கணவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார்.


இந்த வீடியோவைக் கண்ட மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், சுற்றுச்சூழல் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண