சிவகங்கை மாவட்டம்  கண்டாக்கிபட்டி ஊராட்சியை சேர்ந்த  கிராமம் சிவல்பட்டி. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள மந்தைக்கருப்பன சுவாமி கோவிலுக்காக கிராம மக்கள் சார்பில் கோயில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு காளை பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி வந்தது.  அந்த ஜல்லிக்கட்டு காளை 'சிவல்பட்டி மந்தைக்கருப்பன சுவாமி கோயில் காளை' என்றே அழைக்கப்பட்டது. கிராமத்தின் பெருமை பல்வேறு பகுதியிலும் கொண்டு செலுத்தியது.



இதனால் கிராம மக்கள் காளையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தனர். இந்தளவு பெயர்பெற்ற காளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டில் பங்கேற்றபின் உடல் நல குறைவால் உயிரிழந்தது. அப்போது   சிவல்பட்டி  கிராமத்தின் நடுவில் மந்தைக் கருப்பன சுவாமி கோயில் அருகிலேயே புதைக்கப்பட்டது.  அங்கு கிராமத்தினர் சார்பில் மணிமண்டபமும் அமைக்கப்பட்டது. அதில் அந்த காளையின் முழு உருவத்தை சிலையாக வடித்து அதனையும் தங்களது குலதெய்வமாக வழிபாடு  செய்கின்றனர்.  அந்த காளை இறந்த தினத்தினை கிராம மக்கள் தங்களது முன்னோர்கள் இறந்த தினத்தை நினைவு தினமாக அனுசரிப்பதைபோல் இன்றளவும் அனுசரித்துவருகின்றனர்.



10 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டு 10 வது நினைவு தினம் என்பதால் அந்த காளையின் உருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தற்போது அந்த காளைக்கு இணையாக கிராம மக்கள் சார்பில் வளர்க்கப்படும் காளைக்கு அலங்காரம் செய்து அனைத்து மரியாதைகளையும் செய்தனர். மேலும் மந்தைக் கருப்பன சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்து அதனை கிராம மக்களே வணங்கி பொங்கலிட்டு அதனை அனைவருக்கும் பகிர்ந்தனர்.

 

மேலும் அந்த உயிரிழந்த காளையின் உருவ சிலை முன்பு அனைவரும் புகைப்படம் எடுத்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். கிராம சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்ட குழந்தைகள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் பரிசுகளை வழங்கி கிராம மக்கள் கெளரவித்தனர். இறந்த காளைக்கு 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய கிராம மக்களின் இந்த செயல் அனைவரிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 



கிராம மக்கள் பேசும்போது, ”எங்கள் கிராமத்து கோயில் காளை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் என போட்டிகளில் சீறி விளையாடும் பல மாடு பிடி வீரர்களின் குடலையும் சரித்துள்ளது. அந்த அளவுக்கு வீரமிக்க காளை ஆனால் எங்கள் கிராமத்து மக்களிடம் தனது கோபத்தை சிறிதளவும் காண்பித்தது இல்லை. அந்த அறிவான காளைக்கு 10-ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்துள்ளோம்" என்றனர்.