குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும், கலைக்குழுக்களும் பங்கேற்கும். இதில் தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம், வீரம் செறிந்த சுதந்திர போராட்ட வரலாறுகள் இடம் பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சிறப்பான விருதுகளும், பரிசுகளும் பெற்று, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு பங்கேற்க அனுமதியில்லை என்ற அறிவிப்பை கண்டித்து தஞ்சை ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாநகரச் செயலாளர் வடிவேலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் காசிநாதன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சி.பக்கிரிசாமி, சி.சந்திரகுமார், வீரமோகன், கோ.சக்திவேல், திமுக தஞ்சை மாநகர துணை செயலாளர் ஆர். கே.நீலகண்டன்,தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன், காங்கிரஸ் பேரியக்கத்தின் தஞ்சை மாநகர துணை தலைவர் வயலூர் ராமநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன், மக்கள் அதிகாரம் மாநகரச் செயலாளர் தேவா,மாதர் சங்க நிர்வாகிகள் ம.விஜயலட்சுமி, ம.மாலதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வீரமங்கை ராணி வேலுநாச்சியார் காலனி ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து போராடியவர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இழந்த மண்ணை மீட்டவர் இவர் ஒருவர் மட்டும் தான்,தியாக வேங்கை வ.உ.சிதம்பரனார் காலனி ஆதிக்கத்தை எல்லா முனைகளிலும் எதிர்த்துப் போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 30 வயதில் 40 ஆண்டுகால தீவாந்திர சிறை தண்டனை பெற்றவர். கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக சுதேசி கப்பல் போக்குவரத்தை நடத்திய மகத்தான வீரர், பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை, தனது கனல் மூட்டும் கவிதைகளாலும், கருத்தாயுதம் தரும் கட்டுரைகளாலும் எழுச்சியூட்டிய புரட்சியாளர் மகாகவி பாரதியார் காலத்தை வென்று வாழ்பவர். இவர்களது தியாக வாழ்வை சித்தரிக்கும் ஊர்திகளுக்கு குடியரசு தின அணி வகுப்பில் இடமில்லை என்று கூறியிருப்பதால், தமிழகம் கொந்தளிக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். உடனடியாக தமிழ்நாடு அரசின் ஊர்திகள் அனுமதி அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சட்டவிரோத குவாரி நடத்தியவர்களுக்கு 9 கோடி ரூபாய் அபராதம் - நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு தகவல்