பிரபல நடிகர் விஷால்:


இயக்குநர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விஷால். இவர் காந்தி கிருஷ்ணா இயக்கிய ‘செல்லமே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சண்டகோழி, மலைக்கோட்டை, சத்யம், திமிரு,  தோரணை, துப்பறிவாளன், தாமிரபரணி, வெடி, பூஜை, இரும்புத்திரை, அயோக்யா, எனிமி என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது. 


இப்படியான நிலையில் விஷால் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரம் எடுத்த விஷால் துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார். அதேசமயம் தற்போது இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. சினிமாவில் பிஸியான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். 


அழைப்பு விடுத்த தி.மு.க., பா.ஜ.க.: 


இரண்டு முறை சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்தார். அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் அவ்வப்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு விரைவில் விஷால் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் விஷாலுக்கு அரசியல் கட்சியில் இருந்து வந்த அழைப்பு குறித்து அவரது தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


அந்த நேர்காணலில் பேசியுள்ள ஜி.கே.ரெட்டி, “விஷால் ரொம்ப துணிச்சல் நிறைந்தவன்.  அதனால் தான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றான். விஷாலுக்கு பாஜகவில் இருந்தும், திமுகவில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. கையில் நல்ல தொழில் இருக்கிறது. கடவுள் ஆசீர்வாதம் இருக்கிறது. அதை விட்டுட்டு ஏன் அரசியலுக்கு செல்ல வேண்டும் என மறுத்து விட்டான். இப்போது துப்பாறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறான். அவனுக்கு நான் முழு சப்போர்ட் கொடுக்கிறேன். எப்படி நடிப்புல ஜெயிச்சானோ அதே மாதிரி இயக்குநராகவும் வெற்றி பெறுவான். நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட நிலையில், என் ஆசையை நிறைவேற்றி அதுல ஜெயிச்சும் காமிச்சிட்டான். அந்த வெற்றியில நான் என்னையே பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.