மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் அரைக்கப்பட்டு, அந்த அரிசி மாவட்டம் முழுவதும் உள்ள 424 ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அரசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும், தரமான ரேஷன் அரிசி வழங்கக்கோரி பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் அரசு நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. இக்கடையின் மூலம் கிராமத்தைச் சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசின் குடிமை பொருட்களை பெற்று வருகின்றனர். இந்ந சூழலில் இந்த மாதத்திற்கான குடிமை பொருட்கள் இதுவரை வழங்கபடாத நிலையில் விடுமுறை தினமான இன்று கடை திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்பொழுது மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி வண்டுகளுடனும், பழுப்பு நிறத்தில் புழுக்களுடனும் இருந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாகவே தங்களுக்கு வண்டுகள் வைத்த அரிசியை வழங்கப்படுவதாகவும், இதனை சமைத்து உண்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் கொட்டியும், கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்பதால் அரசு வழங்கும் அரிசியையே நம்பி உள்ளனர் என்றும், இவ்வாறான நிலையில் தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் தங்களால் ஒரு வேளை உணவைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாத அவல நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர். எனவே வரும் காலங்களிலாவது தரமான அரிசி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.