கச்சத்தீவை மீட்கக்கோரி சிவசேனா கட்சியினர் தேசியக்கொடியுடன் வந்து தஞ்சையில் உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மனு கொடுத்தனர். கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகில் உள்ள ஒரு தீவாகும். இது இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர் (1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.
1974 மற்றும் 1976 ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி இந்தியா அரசுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் ஒப்பந்த திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு இந்திய மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் அனுமதி இருக்கிறது. ஆயினும் 10 வருடங்களின் பின் இந்த அனுமதி இல்லாத நிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்.. 1960ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.
கச்சத்தீவை மீட்க கோரி, சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், காவி புலிப்படை நிறுவன தலைவருமான புலவஞ்சி போஸ் தலைமையில் மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி ஒன்றியத் தலைவர் சூர்யா கார்த்திக், காவிபுலிப் படையைச் சேர்ந்த பற்குணம் மற்றும் நிர்வாகிகள் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கச்சத்தீவை மீட்கக் கோரி ராஜராஜ சோழன் சிலையிடம் மனுவும் கொடுத்தனர்.
அப்போது புலவஞ்சி போஸ் கூறுகையில், மாமன்னன் ராஜராஜ சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கடல் தாண்டி தனது பேரரசை விரிவுபடுத்தினார். ஆன்மிகத்தையும், அரசியலையும் உலகத்திற்கு விதைத்து சென்றார். உலக வரலாற்றில் பேரரசராக திகழ்ந்தார். கடல் தாண்டி வணிகம் செய்வதற்கு உலகத்தில் கடற்படை அமைத்து வணிகர்களுக்கு பாதுகாப்பாகவும் கடற்படையை ஏற்படுத்தினார். தனது சோழப் பேரரசின் கீழ் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளை கொண்டு வந்தார்.
1974-ம் ஆண்டு கச்சத் தீவூ ஏதோ காரணத்திற்காக இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டது.. அதில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம், மீன்பிடி தொழில் செய்து கொள்ளலாம், மீன் வலைகள் உலர்த்திக்கொள்ளலாம், புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்து வரலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது காலப்போக்கில் மறுக்கப்பட்டு விட்டது.இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களை அச்சுறுத்தி மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் செய்து வருகிறது. இந்திய அரசும் இதனை கண்டுகொள்ளவில்லை.ஆதலால் தாங்கள் ஆன்மா அவர்களுக்கு போதனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். பின்னர் அவர்கள் கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.