மயிலாடுதுறை அருகே சுதந்திரம் கிடைத்ததில் இருந்து சாலையை பார்த்ததில்லை எனவும், உடனடியாக சாலை அமைந்துதர கோரி கிராமம் மக்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆறுபாதி ஊராட்சி ஈஸ்வரன்கோயில் கிராமத்தில் சுமார் 150 மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறை தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களையும் இணைக்கும் வகையில் ஈஸ்வரன் கோயில் குளிச்சார் கிராமங்களை இணைக்கும் 200 மீட்டர் இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலையை மட்டும் இந்தியா சுகாதாரம் அடைந்த நாள் முதல் 70 ஆண்டுகளுக்கு மேலாக செப்பனிடப்படமால் மண் சாலையாகவே இருந்து வருகிறது.
இரண்டு கிராமத்திற்கும் மற்ற இடங்களில் பலமுறை சாலை வசதி ஏற்படுத்தி செப்பனிடப்பட்டாலும், இந்த 200 மீட்டர் இணைப்புச் சாலை மட்டும் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகிவிடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இந்த 200 மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைக்க அரசுத்துறை அதிகாரிகள் முன்வரவில்லை என அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். மேலும் சேரும் சகதியமான சாலையில் நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களை கூட ஓட்டி செல்ல முடியாத நிலையை உள்ளது. சைக்கிளை கையில் தூக்கிக்கொண்டு நடந்து சென்று சாலையை கடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சாலை இல்லாததால் இந்த வழியில் மழைநீர் தேங்கி வீடுகளில் பாம்புகள் உள்ளி விஷ ஜந்துக்கள் உட்புகுவதாகவும், கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குளிச்சாறு கிராமத்திலிருந்து ஆறுபாதி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் இதனால் பல இன்னல்களுக்கு நடுவே சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் சேற்றில் வழுக்கி விழுந்து மாணவர்களின் சீருடை மற்றும் வீணாகுவது மட்டும் இன்றி அவர்களுக்கு காயங்களும் ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்துவரும் மழையால் ஒருநாள் கனமழையில் கூட சாலை சேரும் சகதியமாக மாறிவிடுவதாகவும், இந்த சிரமத்தில் இருந்து தங்களை காக்க உடனடியாக சாலையை செப்பனிட வேண்டும் என்று கூறி கிராம மக்கள் ஏராளமானோர் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 200 மீட்டர் தூரம் சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டு தர வேண்டும் என்று அப்போது அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த சாலையினை கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்து சென்றதாகவும், ஆனால் அதும் எந்த பலனையும் அளிக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.