தஞ்சாவூர்:  நெற் பயிர்களை சேதப்படுத்தி வயலில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி மிரட்டும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாமியார் உள்பட 3 பேர் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளே விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்து வந்த நிலையில் வெளியே இந்த பரபரப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தை சேர்ந்த பிச்சையப்பன் என்பவரின் மனைவி மணியம்மாள் (75), அவரது மகன் சரபோஜி (40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி (38) ஆகிய 3 பேரும் சாகுபடி செய்த நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தங்களின் மீது ஊற்றிக் கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்து பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த போலீசார் உடனடியாக அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் தண்ணீரை அந்த மூன்று பேர் மீது ஊற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் எதற்காக இப்படி செய்தீர்கள் என்று விசாரித்தனர். அப்போது மணியம்மாள் கூறியதாவது:

நாங்கள் எங்கள் ஊரில் இரண்டரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளோம். விவசாயத்தை நம்பியே நாங்கள் உள்ளோம். இந்நிலையில் எனது மகன் நடராஜன் என்பவர் இறந்து விட்டார். அவரது மனைவி யோகவதி என்பவர் வயலில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி சிலருடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தினார். மேலும் நிலத்தை முழுமையாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி மிரட்டி தாக்கினார். இது குறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே எனது மருமகள் யோகவதி மற்றும் அவருடன் வந்து பிரச்னை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள நிலையில் அறுவடையின் போது எவ்வித இடையூறும் ஏற்படாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இதையடுத்து போலீசார் தீக்குளிக்க முயன்ற 3 பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் அலுவலகம் உள்ளே விவசாயிகள் கூட்டம் நடந்து வந்த நிலையில் வெளியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. சேதப்படுத்தப்பட்ட நெற் பயிரை காட்டி மூதாட்டி மணியம்மாள் கண்ணீர் விட்டு கதறி அழுததும் பார்த்தவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.