Maruti Suzuki Price Hike: ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியின் அனைத்து கார் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


மாருதி சுசுகி நிறுவனம்:


மலிவு விலை கார்களுக்கு பெயர் போன மாருதி சுசுகி நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதில் கிடைக்கும் பல்வேறு மாடல்கள், மேம்படுத்தப்பட்ட வேரியண்ட்கள், அவ்வப்போது வழங்கப்படும் அப்டேட்கள், எரிபொருள் வேரியண்ட்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால், நடப்பாண்டில் கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில், மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்தியது. இந்நிலையில் தான், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்நிறுவனம் மீண்டும் விலை உயர்வு நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கார் விலையை உயர்த்தும் மாருதி சுசுகி நிறுவனம்:


புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் உலகம் முழுவதும் பணவீக்க நிலைமைகள் தொடர்ந்து நிலவுகின்றன. இது உலகளாவிய விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளது, இதன் விளைவாக வாகனத் தொழிலுக்கான உள்ளீடு செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான், மாருதி நிறுவனம் தனது ஒழுங்குமுறை வெளிப்படுத்தல் விதிமுறைகளின் ஒரு பகுதியாக, மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த விலை உயர்வு நடவடிக்கை தொடர்பாக தெரிவித்துள்ளது. அதில்,  விலை உயர்வால் ஏற்படும் அழுத்தத்தை நிறுவனம் எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் அதிகரித்த பொருட்களின் விலைகளை உள்ளடக்கியது. மாருதி சுசுகி உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவங்கள் கூடுதல் செலவினங்களை கட்டுப்படுத்தி, உற்பத்தி செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக கூறுகின்றன. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த விலையேற்ற பாதிப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் கொண்டு வருவதை தவிர்க்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளன.


 2024ல் விலை உயர்வு:


அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படும் இந்த புதிய விலையேற்றம், நிறுவனத்த்ன் அனைத்து மாடல்களுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது. அந்த நிறுவனம் சார்பில்  ஆல்டோ, ஆல்டோ கே10, வேகன்ஆர், செலிரியோ, எஸ்-பிரஸ்ஸோ, ஸ்விஃப்ட், ஈகோ, டிசையர், பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா ஆகிய மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகின்றன. மாருதியின் பிரீமியம் நெக்ஸா பிரிவில் இக்னிஸ், ஃபிராங்க்ஸ், பலேனோ, சியாஸ், எக்ஸ்எல்6, ஜிம்னி , கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ ஆகிய மாடல்கள் உள்ளன. இவற்றின் விலை ரூ.3.54 லட்சம் முதல் ரூ.28.42 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடலுக்கும் சரியான விலை உயர்வு ஜனவரி 2024 இல் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


2023ம் ஆண்டு விலை உயர்வு:


மாருதியின் முந்தைய விலை உயர்வுகளின் அடிப்படையில், ஜனவரி 2024 இல் விலை உயர்வு 1% முதல் 2% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2023 இல், மாருதி கார்களுக்கான சராசரி விலை உயர்வு வரம்பில் 1.1% ஆக இருந்தது. 2024 ஜனவரியிலும் இதேபோன்ற ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான உமிழ்வு விதிமுறைகள் மற்றும் கட்டாய பாதுகாப்பு உபகரணங்களுடன் இணங்குவது தொடர்பான மேம்படுத்தல்கள், 2024 ஆம் ஆண்டில் கார் தயாரிப்பாளர்களுக்கான உள்ளீட்டு செலவுகளை அதிகரிப்பதற்கான முதன்மை காரணிகளாக இருக்கலாம். செமி-கண்டக்டர்களின் விலை உயர்வும் கூடுதல் உற்பத்தி செலவிற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக, ஒப்பீட்டளவில் குறைவான எலக்ட்ரானிக் கருவிகளைக் கொண்ட கார்களை விட,  ஹைடெக் அம்சங்களைக் கொண்ட கார்கள் அதிக விலை உயர்வைக் காணக்கூடும்.


மாற்ற கார் உற்பத்தியாளர்களும் விலையை உயர்த்தலாம்?


மாருதி சுசுகி மட்டுமின்றி பல கார் உற்பத்தி நிறுவனங்களும், டிசம்பர் மாத இறுதிக்குள் விலை உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, ஆடி நிறுவனம் ஏற்கனவே 2% அளவிற்கு விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட விலை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ளது. இதேபோன்று, உற்பத்தி செலவை காரணம் காட்டி பல கார் உற்பத்தி நிறுவனங்களும் விலை உயர்வு நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என கூறப்படுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI