தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலதாமதம் தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், நாளை நவம்பர் 4 -ம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, சிவகங்கை, தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒன்றாக கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மிதமான மழையானது பெய்து வருகிறது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் 41 வயதான தமிழ்மணி. இவரது பைபர் படக்கில் இவரது தம்பி 40 வயதான செல்வமணி, மற்றும் 18 வயதான மகன் தஷ்விந்த் ஆகிய மூவரும் நேற்று மாலை 4 மணிக்கு திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இரவு முழுவதும் மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை 6 மணி அளவில் கரை திரும்பிய போது இடி மின்னல் தாக்கியுள்ளது. இதில் பலத்த தீக்காயங்களுடன் எதிர்பாராத விதமாக தஷ்விந்த் நிலை தடுமாறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து மற்ற இருவரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று கடலில் விழுந்து மாயமான தஷ்விந்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீனவர்கள் இடி மின்னல் தாக்கி கடலில் மாயமான சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.