விளநகர் கிராமத்தில் அருள்மிகு வேயுறு தோளியம்மை உடனாகிய துறைகாட்டும் வள்ளலார் கோயில் கும்பாபிஷேகம்  3ஆம் ஆண்டு சம்வத்ராபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை தருமபுர ஆதீனகர்த்தர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு வேயுறு தோளியம்மை உடனாகிய துறைகாட்டும் வள்ளலார் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு முன் காலத்தில் விழர் செடிகள் அடர்ந்து இருந்ததால் "விழர் நகர்' எனப்பட்டது. இது காலப்போக்கில் "திருவிளநகர்' ஆனது. திருஞான சம்பந்தர் கடைமுடி முதலிய தலங்களுக்கு சென்று மயிலாடுதுறை வரும் வழியில் காவிரியாறு கரைபுரண்டு ஓடியது.




அப்போது வழிதெரியாமல் திண்டாடிய சம்பந்தர். “இங்கு துறைகாட்டுவோர் யாரேனும் உளரோ" என்று கேட்க இறைவன் வேடனாக தோன்றி துறைகாட்டி அக்கரை சேர உதவி செய்தாக புராண வரலாறு. மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இவ்வாலயத்தில் 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்  3 -ஆம் ஆண்டு சம்வத்ராபிஷேகத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமி அம்பாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டு காப்பு கட்டி மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், மாங்கல்யதாரணம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்’கள் வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறையில் கச்சேரி பிள்ளையார் என்று அழைக்கப்படும் சித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவையொட்டி, விநாயகர் பெருமான் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது.


மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோயில் மேலவீதி மற்றும் வடக்கு வீதிகளின் சந்திப்பில், கச்சேரி பிள்ளையார் என்று பக்தர்களால் அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற பழமையான சித்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர் பெருமான் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சித்தி விநாயகர் எழுந்தருள செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. 




பின்னர் புஷ்ப பல்லக்கு மாயூரநாதர் கோயிலின் தேரோடும் நான்கு வீதிகளின் வழியே வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் முன்பு விநாயகர் பெருமானுக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.


மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற  விநாயகர் கொடியேற்றம்.


மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படும். கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதால் ஐப்பசி மாதம் 30 நாளும் மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பாடாகி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதே போல் வதனியேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறும். 




அவ்வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத முதல்நாள்  சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. தினந்தோறும் மாயூரநாதர்  ஆலயத்தில் இருந்து சந்திரசேகர சுவாமி புறப்பாடாகி காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்து நாள் உற்சவமாக  திருக்கொடியேற்றம் செய்யப்பட்டு அமாவாசை தீர்த்தவாரி, திருக்கல்யாணம், திருத்தேர், பிரசித்தி பெற்ற கடைமுக தீர்த்தவாரி, முடவன் முழுக்கு நடைபெற உள்ளது. 




இதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம் நடைபெற்றது.  அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, விநாயகர், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை வேளப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத  சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து விநாயகர் கொடியேற்றம் நடைபெற்றது. இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.