ஆண் - பெண் உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு காலம் காலமாக இருந்து வைத்தாலும் கருவிலேயே பெண் சிசுவை அழிப்பது, பிறந்த உடனேயே கள்ளிப்பாலை கொடுத்து கொள்ளும் கொடூரமான மனிதநேயமற்ற வழக்கம் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இருந்து வந்துள்ளது. இப்படிப்பட்ட பெண்களுக்கு எதிரான பெருங்கொடுமையின் பழக்கத்தை சுட்டிக்காட்டி சாடிய கதையாக வெளிவந்த 'கருத்தம்மா' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  


 



பாசத்துக்குரிய பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான இப்படம் பொட்டல் பட்டி கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. சிறுவயது முதல் பெண் பிள்ளையாக பிறந்ததால் சித்திரவதையை அனுபவித்து வளர்ந்தவள் கருத்தம்மா. பெண் குழந்தையாக பிறந்தால் தாய்ப்பாலுக்கு முன்னரே கள்ளிப்பாலை கொடுத்து சிசுவை கொல்வதை வழக்கமாகக் கொண்ட ஒரு பட்டிக்காட்டில், அவளுக்கு அடுத்து பிறந்த இரண்டு சிசுக்களையும் கொன்ற கருத்தமாவின் அப்பன் மொக்கையன் ஐந்தாவது ஆண் குழந்தை பிறக்கும் என கோடாங்கி குறி சொல்ல, அதை நம்பி பெற்று கொண்ட ஐந்தாவது பிள்ளையும் பெண் பிள்ளையாக பிறக்க அதையும் கள்ளிப்பால் கொடுத்து கொல்ல சொல்கிறார். 


ஊர் வாத்தியார் அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் ஆயாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு அதை வளர்த்து டாக்டராக்குகிறார். எந்தக் குழந்தையை மொக்கையன் கொல்ல சொன்னாரோ, அதே குழந்தை பிறந்து மருத்துவராக அந்த கிராமத்துக்கு வந்து பக்கவாதத்தால்  படுத்தப்படுகையாக இருந்த போது அவரின் உயிரை காப்பாற்றுகிறது.


 


 



படிப்பறிவு இல்லை என்றாலும் பகுத்தறிவு உள்ளவள். எந்தப் பெண் பிள்ளையை பிறந்ததில் இருந்து சித்ரவதை செய்தாரோ அந்த பெண் பிள்ளை தான் அப்பா பக்கவாதத்தால் இருந்தபோது பெற்ற தாயை போல பார்த்து கொள்கிறாள். ஊருக்கு வந்த மாட்டு டாக்டருக்கு கருத்தம்மா மீது ஈர்ப்பு.. அவளுக்கும் அப்படித்தான். ஆனால் அதுவும் காற்றில் அடித்து செல்லப்பட்டது. 


அக்காவுக்கு தொடர்ந்து மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகளாக பிறக்க  அக்காவின் கணவரும் மாமியாரும் சேர்ந்து அக்காவை அடித்தே கொல்கிறார்கள். அக்காவை கொன்றது மட்டுமில்லாமல் மச்சினி கருத்தம்மா மேல் ஆசைப்பட்டு அவளையும் திருமணம் செய்து கொல்ல எண்ணம் கொண்ட மாமனாகிய காமக்கொடூரனை அடித்தே கொலை செய்து சட்டம் முன்பு குற்றவாளியாக நிறுத்தப்படுகிறாள் கருத்தம்மா. என்றாலும்  தர்மத்தின் முன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டியவள். 


 



பெண் சிசுக்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் அல்ல, பேணிக் காக்கப்பட வேண்டிய தேவதைகள் என்பதை உணர்த்திய கருத்துள்ள படம் தான் கருத்தம்மா. ராஜா, ராஜஸ்ரீ, மகேஸ்வரி, ஜனகராஜ், பெரியார்தாசன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு கிராமத்து இசையால் மனதை கொள்ளையடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். பச்சைக்கிளி பாடும் ஊரு, தென்மேற்கு பருவக்காற்று, காடு பொட்ட காடு, போறாளே பொன்னுத்தாயி என கிராமத்து மனம் வீசும் இசையால் கேட்போரை கரைய வைத்துவிட்டார். 


இந்த அழுத்தமான கதைக்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது!