மயிலாடுதுறையில் குறைதீர் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.
பின்னர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. அதன் இறுதியாக 1.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15 -ஆம் தேதி இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்பாகவே பெரும்பாலான மகளிரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருந்தது.
Urvashi Rautela: 24 காரட் தங்க ஐஃபோனை காணவில்லை.. மோடி மைதானத்தில் தொலைத்த 'லெஜெண்ட்' பட நடிகை!
இருந்த போதிலும் விண்ணப்பித்த ஏராளமான பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகை பல்வேறு காரணங்களால் வழங்க படவில்லை. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ள பெண்கள் பல இடங்களில் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை ஆகியோர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய பதிலை அளித்தனர்.
கூட்ட அரங்கில் மனு கொடுக்க வந்த மக்கள் மற்றும் அதிகாரிகளால் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், திடீரென 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து மாவட்ட ஆட்சியர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஆட்சியர் மகாபாரதி எழுந்து நின்று பெண்களிடம் தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனையும் உள்ளது. கோட்டாட்சியர்கள் கள ஆய்வு செய்து விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை ஏற்று பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் விண்ணப்பித்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் மறு விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.