மயிலாடுதுறையில் 3 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியதற்கான தொகை குறித்து மனு அளித்த 3 நாள்களில் கிடைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார். மயிலாடுதுறை தாலுக்கா திருச்சிற்றம்பலம் ஊராட்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி அனிதா. இவர் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்த காலங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் கடந்த திங்கள்கிழமை நவம்பர் 6-ம் தேதி நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் மனு அளித்திருந்தார்.
உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் இந்த ஊதியம் அதே ஊராட்சியை சேர்ந்த கண்ணன் என்பவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கண்ணனின் வங்கிக் கணக்கில் போதிய நிதி இல்லாததால் இச்செயலுக்கு காரணமான பணித்துணையாளர் கல்பனா, மகேஸ்வரி ஆகியோரிடம் தொகை வசூல் செய்யப்பட்டு அனிதாவின் வங்கிக் கணக்கில் 13,370 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
மீதம் முள்ள 12,000 ரூபாயை அதற்கு பொறுப்பான பணியாளரிடம் வசூலித்து கட்டவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இத்தவறுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக நூறுநாள் வேலை வேலைக்கு சென்ற ஏழை பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படாத சம்பவம் மயிலாடுதுறையில் கேட்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.