இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு அரசால் புதிதாக இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை இயற்றும் முன், முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையிலான குழு மூலம் நீண்ட காலமாக பொதுமக்களிடம் ஆன்லைன் சூதாட்ட குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதில், அதிகப்படியான மக்கள் ஆன்லைன் சூதாட்டம் மூலம் அடுத்தடுத்து பல நபர்கள் தற்கொலை செய்து கொள்வதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறினர்.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டம் இயற்றப்பட்டதும் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் ஏஐஜிஎஃப் மற்றும் கேமிங் நிறுவனங்களான கேம்ஸ் கிராஃப்ட், பிளே24*7, ஏ23 போன்றவை உடனேயே சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகின. அப்போது இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கு தொடர்ந்த விளையாட்டு நிறுவனங்கள், “ இந்த சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, சூதாட்ட விளையாட்டாக கருத முடியாது” என தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்ப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கியுள்ள அதிகாரத்தின்படியே, இயற்றப்பட்ட இந்த சட்டம் செல்லுபடியாகும். பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்தசூழலில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று மதியம் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்க இருக்கிறது. சூதாட்ட சட்ட நீதித்துறையின் பரிணாம வளர்ச்சியில் இன்றைய தீர்ப்பின் முடிவு முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடிவு எதுவாக இருந்தாலும், தோல்வியடைந்த தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு கேமிங் மற்றும் காவல்துறை சட்டங்கள் (திருத்தம்) சட்டத்தின் அடிப்படையில் அப்போதைய அதிமுக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை விதிகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தொழில் அல்லது தொழில் செய்வதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக உயர்நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பின் 19 (1)(g) பிரிவின் கீழ் கர்நாடக அரசின் இதேபோன்ற மேல்முறையீட்டு மனுவுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தற்போது நிலுவையில் உள்ளது .
மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், நீதிபதி சந்துரு குழு மூலம் பொதுமக்களிடம் கலந்தாலோசித்த பிறகு தற்போதைய திமுக அரசு மற்றொரு சட்டத்தை கொண்டு வந்தது. இந்த இரண்டாவது சட்டம் முதலில் ஒரு அரசாணையாக கொண்டு வரப்பட்டு பின்னர் சட்டமன்றம் மூலம் ஒரு சட்டமாக இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.