தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளியாக மாற்றி வருகிறார்கள். இவர்களின் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.


மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தினந்தோறும் பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மூலிகைகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி மாணவர்கள் “தினந்தோறும் தகவல்களை” தெரிவித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மக்கும் குப்பை மக்கா குப்பை தொட்டி வைக்கப்பட்டு நெகிழி இல்லா பள்ளி வளாகமாக தூய்மையான சுகாதாரமான சூழலை பசுமை படை மாணவர்கள் செயலாற்றி வருகின்றார்கள்.


இதற்காக கடந்தாண்டு  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய பசுமை முதன்மையாளர் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளார்கள். மாணவர்கள்தான் வருங்காலத்தின் அஸ்திவாரம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மு.ஆறுமுகம் செயல்பட்டு வருகிறார். மாணவர்களே பள்ளி வளாகத்தைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு அதை பராமரித்து வருகின்றனர். மரங்களுக்கு மறுசுழற்சி இயற்கை உரங்களை பயன்படுத்தி மரங்களை பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


பள்ளியில் மட்டுமின்றி பொதுமக்களிட்மும் விழிப்புணர்வு பேரணிகள் மூலம் மரக்கன்றுகள் நடுவதின் முக்கியத்துவத்தை விளக்கி மற்றும் நெகிழி இல்லா கிராமப் பகுதியாக மாற்றுவதற்கு விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளிக்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று நெகிழி கழிவுகளை அகற்றி உயிரினங்களுக்கு தீங்கு  ஏற்படாத வகையில் பாதுகாக்கின்றனர்.  குளக்கரை சுற்றிலும் தேசிய பசுமைப் படை மாணவர்கள் மூலம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது என்பதும் முக்கியமான விஷயம் ஆகும். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பிறந்தநாளின் போது தேசிய பசுமைப்படை சார்பாக மரக்கன்றுகளை வழங்கி அதை நன்றாக பராமரித்து வருபவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுத்தி வருகின்றனர். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வளர்ப்பதில் பேரார்வம் ஏற்பட்டு வருகிறது.


பள்ளியில் உள்ள மூலிகை தோட்டத்தில் 40க்கும் மேற்பட்ட மூலிகை வளர்க்கப்பட்டு வாரந்தோறும் மூலிகை தோட்டத்திற்கு வரவழைத்து அதனுடைய பயன்களை நேரடியாக விளக்கி மாணவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்து அதில் கிடைக்கின்ற காய்கறிகளை சத்துணவிற்கு வழங்கப்படுகிறது. இதை மாணவர்கள்தான் பராமரிக்கின்றனர்.




பறவைகள் உணவு உண்ண பயன்படுத்திய நெகிழி குடுவைகளை வைத்து பறவைகளைப் பேணுதல், பள்ளி வளாகத்தில் உயிரிவள கணக்கெடுப்பு விவரத்தை தெரியப்படுத்த சுவற்றில் எழுதி வைத்தல் மற்றும் மூலிகையின் பயன்களை விளக்குவதற்கு பள்ளி சுவற்றில் எழுதி வைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டிலும் தேசிய பசுமை படை சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பசுமை மாணவன் விருது வழங்கப்படுகிறது.  கடந்தாண்டு நடைபெற்ற உலக ஓசோன் தின இணைய வழி தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்றதற்கான சஹானா  என்ற மாணவி பாராட்டு சான்றிதழை பெற்றுள்ளார்.


பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். வளர்மதி மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இதனால் இப்பள்ளியில் பெருமை உயர்ந்து கொண்டே செல்கிறது.  தேசிய பசுமைப் படை சிறந்த செயல்பாட்டிற்கும், மாணவர்களுடைய கல்வியின் முன்னேற்றத்திற்கு உழைத்ததற்கும் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மு.ஆறுமுகத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. மாணவர்கள்தான் வருங்காலத்தின் அஸ்திவாரம். அவர்கள் வலுவாக மரங்கள் போன்று உறுதியாக நிற்க பள்ளியிலேயே இதுபோன்று பசுமைப்படை வாயிலாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கற்பிக்கப்படுகிறது.