உலகக் கோப்பை 2023ல் இதுவரை 40 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து முன்னிலையில் உள்ளன.
அதேசமயம், அரையிறுதியில் எஞ்சிய ஒரு இடத்துக்காக மூன்று அணிகளுக்கு இடையே சண்டை நடந்து வருகிறது. உலகக் கோப்பையில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்குப் பிறகு யார் அரையிறுதிக்கு தகுதிபெறுவார்கள் என தெரிந்துவிடும். ஒருவேளை நான்காவது இடத்துக்கு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தகுதி பெற்றால், அரையிறுதியில் இந்தியாவை சந்திக்கும்.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெற என்ன செய்ய வேண்டும்..?
புள்ளிகள் மற்றும் ரன் டேட் அடிப்படையில் பாகிஸ்தானின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும், அரையிறுதி போட்டியில் இருக்கும் நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன. மூன்று அணிகளுக்கும் தலா 1 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் நான்காவது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
முதலில், நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் தோற்கடிக்க வேண்டும். இதற்குப் பிறகு, நியூசிலாந்து தனது கடைசி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் தோல்வியை சந்திக்க வேண்டும். இதன்மூலம், பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தைப் பிடித்து நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் நியூசிலாந்தும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றால், நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு நெட் ரன் ரேட் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் ஆப்கானிஸ்தானை விட சிறப்பாக உள்ள நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் சிறந்த ரன் ரேட்டை பெற வேண்டும்.
பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் தங்களது கடைசி ஆட்டங்களில் தோல்வியடைந்தால், பாகிஸ்தான் நான்காவது இடத்தில் தொடர்ந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கும். இப்படியான சூழ்நிலையில் இன்று நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து மிகவும் மோசமான நிகர ரேட் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும். இது மட்டும் நடந்தால் அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதலை ரசிகர்கள் பார்க்க முடியும். இல்லை என்றால் பாகிஸ்தான் லீக் போட்டிகளுடன் வெளியேறுவது உறுதி.
ஆப்கானிஸ்தான் அணி தகுதிபெற என்ன செய்ய வேண்டும்..?
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் இடம்பிடித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைய முயற்சிக்கிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால், எப்படியும் கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி இதைச் செய்தாலும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானின் வெற்றி மற்றும் தோல்வியை நம்பியே இருக்க வேண்டும், ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் இந்த இரண்டு அணிகளை விட குறைவாக உள்ளது.