மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குத்தாலம், கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்று தங்கள் பகுதி கருத்துக்களை பதிவு செய்தனர் .
இந்நிலையில் கடந்த வாரம் கொள்ளிடத்தை அடுத்த அளக்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இதனிடையே இக்கூட்டத்தில் பேசிய அளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி, மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வெகு நாட்கள் ஆகியும் பிரச்சனைக்கு தீர்வில்லை என கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.
உடனடியாக அங்கு இருந்த அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தண்ணீர் வழங்க ஏன் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினார். பைப்லைன் உள்ளிட்ட எந்த பணிகளும் ஏன் தொடங்கவில்லை எனவும் அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேள்வி கேட்க? பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். தொடர்ந்து நீங்கள் தண்ணீர் இல்லாமல் வாழ்வீர்களா எனவும், உயிர் போன பிறகு தான் பணிகளை செய்வீர்களா எனவும் கடுமையாக சாடினார்.
ஆய்வு மேற்கொண்டால் அதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து கவனிக்க வேண்டாமா என அதிகாரிகளை ஆட்சியர் கடிந்து கொண்டார். உடனடியாக அப்பகுதி மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் எனவும், ஊராட்சி மன்ற தலைவர்கள் எந்த புகார்கள் இருந்தாலும் உடனடியாக என்னை நேரில் வந்து பார்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்