திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த ஆதரவே ஈரோடு இடைத் தேர்தல் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். நாலாம்தர பேச்சாளர் போல பேசிய இபிஎஸ்க்கு மக்கள் கொடுத்த பாடம் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நின்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு மிகப்பெரிய மகத்தான வரலாற்றில் பதிவாகக் கூடிய வகையில் ஒரு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்து இருக்க கூடிய அந்த தொகுதியின் வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”.
"இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கூறியதைப் போல திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்கின்ற வேண்டுகோளை தொடர்ந்து விடுத்தேன். திராவிட மாடல் ஆட்சி இன்னமும் பெருமளவில் நடைபெற வேண்டும் என்கின்ற நோக்கில் மக்கள் இந்த மகத்தான வெற்றியை அளித்துள்ளனர்” என்றார்.
”மக்கள் தந்த பாடம்"
இதனை தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரையில் தன்னையே மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரைப் போல் பேசிய பேச்சுக்கு மக்கள் ஈரோடு இடைத்தேர்தல் மூலமாக ஒரு நல்ல பாடத்தை வழங்கி உள்ளார்கள் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், "20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு பொதுமக்கள் அங்கீகாரம் தர வேண்டும், இடைத்தேர்தலாக மட்டும் இல்லாமல் இந்த ஆட்சியை எடை போட்டு பார்க்கக்கூடிய தேர்தலாக பார்க்க வேண்டும் என பொதுமக்களிடம் நான் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டேன். இந்த நிலையில் இந்த ஆட்சிக்கு மிகவும் வலு சேர்க்கக் கூடிய வகையில் மேலும் ஒரு வெற்றியைத் தேடி தந்துள்ளார்கள்” என்றார்.
"மக்களுக்கு நன்றி”
இதனை தொடர்ந்து பேசிய அவர், ”விரைவில் நாம் சந்திக்க இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு இது அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அந்த தொகுதி மக்கள் அத்தனை பேருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக சார்பிலும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்டு பணியாற்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச்செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்திலும் இதைவிட ஒரு மிகப்பெரிய வெற்றியை நிச்சயமாக வழங்குவார்கள்" என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..
Ashwin Record: வாவ்.. கபில்தேவை பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்..! புதிய வரலாறு படைத்து சாதனை...!