ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவெரா திருமகன் உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசும், நாம் தமிழர் தரப்பில் மேனகாவும், தேமுதிக தரப்பில் ஆன்ந்தும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 74.79% வாக்கு பதிவானது. கடந்த முறை 69.58% வாக்கு பதிவானது.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
நண்பகல் 12 மணி நிலவரம் – 5அது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி 39,692 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக – 13,514 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சி 1,481 வாக்குகளும், தேமுதிக 254 வாக்குகளும் பெற்றுள்ளது.
கடந்த முறை ஈவெரா திருமகன் 67,300 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். தமாகா வேட்பாளர் யுவராஜா 58,396 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அதாவது 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவேரா திருமகன் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 39 ஆயிரம் வாக்குகள் பெறப்பட்டுள்ளது, அதிமுக 13 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது. சுமார் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் அதிகபட்ச வாக்கு வித்தியாசம் 15 ஆயிரம் வாக்குகளாக இருந்தது. ஆனால தற்போது 5வது சுற்றிலேயே காங்கிரஸ் 26ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. இதுவே வரலாற்றில் முதன்முறையாகும், எனவே காங்கிரஸ் கட்சி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என கூறப்படுகிறது.