தஞ்சாவூர்: தஞ்சையில் வரும் 11-ந் தேதி நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் உள்ள விலங்குகள் வதை தடுப்பு சங்க அலுவலக வளாகத்தில் (எஸ்.பி.சி.ஏ) மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் தலைமை வகித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சையில் வரும் 11-ந் தேதி நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு விலையின்றி வெறிநோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாய் வகைகளை பராமரித்து அவற்றின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்து கூற வேண்டும். நாய் இனங்களை பாதுகாக்க வேண்டும், எஸ்.பி.சி.ஏ பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. எஸ்.பி.சி.ஏ.வில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சுகாதாரமான முறையில் ஒரு ஆபரேஷன் தியேட்டரில் வைத்து இந்த பணி நடக்கிறது . கருத்தடை முடிந்து 3 நாட்களுக்கு நாய்களுக்கு தேவையான உணவு கொடுத்து பராமரித்த பின்னரே அவற்றை வெளியில் விடுகிறோம். எத்தனை நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.