மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் முக்கூட்டு சாலையில் இயங்கி வந்த பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு புகையிலை மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் தேனீர் கப்புகள் இருந்ததை கண்டறிந்து பெட்டிக்கடை உரிமையாளரிடம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 




மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மற்றும் புகையிலை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்க   மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட ஈசானிய தெருவில் இயங்கி வரும் பல்பொருள் விற்பனை கடையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, கடை உரிமையாளரிடம் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Magalir Urimai Thogai: கலைஞர் உரிமைத் தொகை திட்டம்; திருவண்ணாமலையில் உதவி மையங்களுக்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம்




அதனை தொடர்ந்து, சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகள் குறித்தும் ஆய்வு செய்து, நகராட்சி மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார். பின்னர், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணிகளில் ஒன்றான நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட  துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை மேற்கூரை கடந்த செவ்வாய் கிழமை இடிந்து விழுந்ததையொட்டி, மாவட்ட ஆட்சியர்  பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி சமையலறை, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆணையரிடம் கேட்டறிந்தார். 


Royal Enfield: ராயல் என்ஃபீல்ட் பைக் வாங்க முடியலன்னு கவலையா? வாடகைக்கு எடுத்தே பயன்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?




தொடர்ந்து, சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு  முகாமில்  மூன்று சக்கர வண்டிகள், மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள் மற்றும் நடை பழகு உபகரணம், காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, பிரெய்லி கை கடிகாரம், புற உலக சிந்தனையற்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உபகரணங்களை வழங்கினார். இவ்வாய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் விஜயேஸ்வரன், ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.