கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் தொகை வரவு வைக்கப்படாதவர்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய பிரத்யேக இணையதள முகவரியிலும், உதவி மையங்களுக்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் தொடக்க நாளாக கடந்த 15-ந் தேதியன்று அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது. இதனை சரி செய்து அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மனியார்டர் மூலமாக தொகை அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.


 




வரவு வைக்கப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகள் எடுக்கும் வரை அவர்களின் வங்கி கணக்கிலேயே தொடர்ந்து இருக்கும். பயனாளிகள் தங்களின் தேவை அல்லது விரும்பும் வரை தொகையினை வங்கி கணக்கில் வைத்திருக்கலாம். மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகிய காரணங்களுக்காக திட்ட ஒப்பந்தத்திற்கு முரணாக சில வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் முதல்வரின் முகவரி உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண்.1100-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி தொடர்புடைய விண்ணப்பதாரர்களின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு நாளை  முதல் அனுப்பி வைக்கப்படும்.


 




இதில் தகுதியானவர்கள் எவரும் தேர்வு செய்யப்பட வில்லை என கருதினால், விண்ணப்பம் ஏற்கவில்லை என்ற குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல் முறையீடு செய்ய வேண்டும். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. மேல்முறையீடு அலுவலரான வருவாய் கோட்டாட்சியரால் மேல்முறையீடுகள் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மேலும் விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய அரசால் https://Kmut.tn.gov.in என்ற இணையதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தங்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் 1100 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம்.


 




திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள உதவி மையங்களுக்கும் நேரில் சென்று தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். உரிமைத்தொகை அனுமதிக்கப்பட்ட மகளிர்கள் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு ஆகியன ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான வசதியும் விரைவில் ஏற்படுத்தி தரப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் தகுதியான ஒரு மகளிர் கூட விடுபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதே போன்று இத்திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பம் அளிக்காதவர்களுக்கும் விண்ணப்பங்கள் அளிக்க விரைவில் வாய்ப்புகள் அளிக்கப்படும். இதற்கான செயல்திட்டம் அரசால் வகுக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மகளிர்கள் இத்திட்டத்தின் கீழ் பகிரப்படும் சில தேவையற்ற வதந்திகளை புறந்தள்ளி தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.