நாகப்பட்டினம்: காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், காய்ந்த குறுவை பயிர்களுக்கு காப்பீட்டுக்கு இணையான நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கருகிய பயிர்களை பாடை கட்டி தூக்கி நையாண்டி மேளம் இசைத்து பெண்கள் கும்மி அடித்து போராட்டம் செய்தனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் காய்ந்த குறுவை பயிர்களுக்கு காப்பீட்டுக்கு இணையான நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், காவிரி நீரை கர்நாடகம் திறந்து விடாததை கண்டித்தும், உச்சநீதிமன்றம் காவிரி வழக்கை அவசர வழக்காக விசாரித்து தமிழகத்தில் நீர் வழங்குவது உறுதி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் கூட்டு இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.
நாகப்பட்டினம் அவுரி திடலில் இருந்து பேரணியாக சென்ற விவசாயிகள் கருகிய நெற்பயிர்களை பாடையில் கட்டி தூக்கி சென்றனர். மேலும் விவசாயிகளின் சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக நையாண்டி மேளம் இசைத்து ஒப்பாரி வைத்தும் பெண்கள் பேரணியில் பங்கேற்றனர். மேலும் காய்ந்து கைவிடப்பட்ட குறுவை பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டிற்கு இணையான நிவாரணம் வழங்கிடவும், பகுதி பாதித்த விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பேரணி முக்கிய சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல முற்பட்ட விவசாயிகளை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலையில் தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினார். இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.