தஞ்சாவூர்: சென்னையில் நடத்தப்படும் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் குழுக்கள் நாளைக்குள் https:/exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் மாநில அளவில் மூன்று கண்காட்சிகள் அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம், சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.


தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது. 


இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப்பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஒலை பொருட்கள் போன்ற பொருட்களும் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு தேவையான கொலு பொம்மைகள், சிறிய வகை நினைவு பரிசுகள் காட்சி மற்றும் விற்பனை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும், இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் தயாரிக்கும் குழுக்களும் அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே, மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விருப்பினால் செப்.22 ம் தேதிக்குள் https:/exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 




தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான முந்திரிப் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு போன்றவை கண்காட்சியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். 


இதேபோல் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள். பொம்மைகள், காபிப் பொடி, மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் போன்றவையும் மகளிர் குழுக்கள் தயாரிக்கின்றன. இவற்றை கண்காட்சியில் வைப்பதன் மூலம் விற்பனை செய்யப்படும். இதனால் மகளிர் குழுக்களில் வாழ்வாதாரம் உயரும். 


மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய இது ோன்ற கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் போன்ற மகளிர் குழுக்களின் தயாரிப்பு பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.