பாசனத்துக்கு தண்ணீர் இன்றி கடந்த 15 ஆண்டுகளாக திருவாரூர் அருகே உள்ள கேக்கரை கிராமத்தில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். திருவாரூர் அருகே கேக்கரை, தெற்கு சேத்தி, வடக்கு சேத்தி, பகுதிகளில் சுமார் 960 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு ஓடம்போக்கி ஆற்றில் ஏ பிரிவு கிளை வாய்க்காலிலிருந்து பி பிரிவு கிளைகளாக பிரிந்து வருகின்ற பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. நாளடைவில் திருவாரூர் நகரத்தின் வளர்ச்சி காரணமாக பாசன வாய்க்காலை ஒட்டிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் அதிகரித்து குடியிருப்புகள் அதிகரித்துவிட்டன. தற்போது திருவாரூர் நகராட்சியின் முக்கிய வார்டுகளாகவும் அந்த நகர்கள் உருவாகிவிட்டது. இதன் காரணமாக வாய்க்கால் முழுவதும் கழிவு நீரோடைகளாக மாறியுள்ளன. புதர்கள் மண்டி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து நீர் ஓட்டம் தடைபட்டு விட்டது.

 

இதனை சரி செய்யாத நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் இப்பகுதி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விட்டன. ஒரு சில விவசாயிகள் மட்டும் மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி இந்த ஆண்டாவது முழுமையாக தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இந்த பகுதி விவசாயிகள் உள்ளனர்.



இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளான ராஜேந்திரன், கலியபெருமாள்,  உட்பட பலர் கூறும்போது,

 

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் கொண்டு வரும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம்  செய்தது. சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு தூர்வாரி கொடுத்தது. தண்ணீர் வராத காரணத்தால் அந்த வாய்க்கால்கள் பயன்படாத நிலையில் தற்போது தூர்ந்து போய்விட்டன. இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வாய்க்காலில் உள்ள அடைப்புகளை சீர்படுத்தி தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் வருகின்ற நிலையில் பாசன வாய்க்காலில் இதன் மூலம் கேக்கரை பகுதி விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும். கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் உள்ள 960 ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் சாகுபடி செய்ய முடியாமல் விவசாய நிலங்களில் காட்டுக் கருவை மரங்கள் அதிக அளவில் மண்டி கிடக்கின்றன. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்கள் பகுதியில் இருந்த விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், கோவை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வேலை தேடி சென்று விட்டனர். இதன் காரணமாக எங்கள் பகுதியில் விவசாய கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.



இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இதனை பயன்படுத்தி உடனடியாக எங்களது கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதுமட்டுமின்றி கொரோனா தொற்றின் காரணமாக வெளியூரில் இருந்த கூலி தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளதால், இந்த ஆண்டு தண்ணீர் வந்தால் மட்டும் விவசாயத்தை எளிதாக செய்ய முடியும் என இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர்.