அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதில் இருந்து ஒரு நபர் மட்டும் தப்பியுள்ளார். இதை, அகமதாபாத் காவல்துறை உறுதி செய்துள்ளது. விபத்து நடப்பதற்கு ஒரு சில வினாடிக்கு முன்பு அவர் அவசர எக்ஸிட் வழியாக தப்பியதாகக் கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து, அவர் சாலையில் பதற்றத்துடன் நடந்து வரும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக் ஆஃப் ஆன ஒரு நிமிடத்திற்குள் விபத்து:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து டேக் ஆஃப் ஆகும்போது, விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. அந்த விமானம், பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்:

விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், நல்வாய்ப்பாக விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். 

ஆயிரத்தில் ஒருவன்:

விபத்தில் உயிர் தப்பிய அந்த நபரின் பெயர் விஸ்வாஷ் குமார் ரமேஷ். இவருக்கு வயது 40. இந்திய வம்சாவளியான இவர், இந்தியாவுக்கு பயணம் செய்துவிட்டு பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார். அப்போதுதான், விபத்தில் சிக்கியுள்ளார். 

சீட் நம்பர் 11Aவில் அமர்ந்திருந்த இவர், விபத்து நடப்பதற்கு ஒரு சில வினாடிக்கு முன்பு அவசர எக்ஸிட் வழியாக தப்பியதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், விபத்தை தொடர்ந்து இவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. காலில் காயத்துடன் அந்த நபர் நொண்டி நொண்டி நடப்பதை வீடியோவில் பார்க்கலாம். அவரது ஆடைகளில் ரத்தக் கறைகள் படிந்துள்ளன.

 

இதுகுறித்து அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறுகையில், "11A இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மருத்துவமனையில் உயிர் பிழைத்த ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறப்பு எண்ணிக்கை குறித்து இன்னும் எதுவும் கூற முடியாது. குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்" என்றார்.