சென்னை நகரின் முக்கிய பகுதியான வடபழனியில், 481 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6.65 ஏக்கரில், வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையம் கட்டப்பட உள்ளது. மெட்ரோ நிறுவனம் மேற்கொள்ள உள்ள இந்த திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அது குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஒருங்கிணைந்த பேருந்து முனையம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுனம் மூலம், சென்னை வடபழனியில் வணிக வளாகத்துடன் கூடிய புதிய பிரமாண்ட பேருந்து முனையத்தை அமைக்க உள்ளது.
இதற்காக, வடபழனி பேருந்து பணிமனை வளர்ச்சித் திட்ட ஒப்பந்தம் 481.3 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடபழனி ஆற்காடு சாலையில், 6.65 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் பேருந்து பணிமனை இருக்கும் இடத்தில் தான் இந்த புதிய பேருந்து முனையம் உருவாக்கப்பட உள்ளது.
12 மாடியுடன் கூடிய புதிய வளாகம்
இந்த புதிய வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையம் 12 மாடிகள் கொண்டதாக இருக்கும். அதன் தரைத் தளத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. அதில், நுழைவு வாயில், 5 ஏறும் இடங்களும், 2 இறங்கும் இடங்களும், பயணிகளுக்கான மற்ற வசதிகளும் இருக்கும்.
அதுபோக, சிறிய விற்பனை நிலையங்களையும் இந்த தரைத் தளத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பார்க்கிங் வசதி, கார்ப்பரேட் அலுவலகங்கள், உணவகம்
இந்த வளாகத்தின் 2 அடித்தளங்களில் 1,475-க்கும் மேற்பட்ட பைக்குகள், 214 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வசதிகள் இருக்கும். முதல் தளத்திலிருந்து 10-வது தளம் வரை, கார்ப்பரேட் அலுவலகங்களும், அவற்றிற்கு தேவையான வரவேற்பு அறைகள், ஓய்வறைகள் உள்ளிட்டவைகளையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் 5-வத தளத்தில், பயணிகள், அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு மையம் அமைகிறது. 11, 12-வது தளங்கள், அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், கேமிங் அண்ட் காமிக்ஸ் துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
பசுமைத் தோட்டம்
மாடியில், பசுமையான தோட்டம் மற்றும் சூரிய ஒளி மின்கல அமைப்புகள் இடபெற்றிருக்கும். இது, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மின்சார செலவை குறைக்கும் வகையிம் அமையும் என கூறப்பட்டுள்ளது.
உலகத்தரத்துடன் உருவாக்கப்படும் இந்த கட்டிடம், நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பிராட்வே, மந்தைவெளி பேருந்து நிலையங்கள் நவீன பேருந்து நிலையங்களாக பல அடுக்கு வளாகங்களாக கட்டப்பட உள்ள நிலையில், தற்போது வடபழனியிலும் பிரமாண்ட பேருந்து முனைய வளாகம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், வடபழனி மேலும் பெரிய வளர்ச்சியை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.