Bengaluru Auto Fare: பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவற்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், பெங்களூருவில் ஆட்டோ கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே, பால், டீசல், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், ஆட்டோ கட்டண உயர்வு அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் ஐடி தலைநகரம்:
நாட்டின் ஐடி தலைநகராக உள்ள பெங்களூருவை கார்டன் சிட்டி என்றும் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றும் அழைப்பதுண்டு. நகரை சுற்றி தோட்டங்களாகவும் பூங்காக்களாகவும் உள்ளதால் பெங்களூருவை கார்டன் சிட்டி என அழைக்கின்றனர். அதேபோல, உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களும் அமேசான், மைக்ரோசாப்ட், பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களின் Research and Development மையங்களும் அமைந்துள்ளதால் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
அதிக அளவிலான ஐடி ஊழியர்கள் வசிப்பதால் அங்கு விலைவாசி உயர்வு உச்சத்தை தொட்டு வருகிறது. மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னையை காட்டிலும் அங்கு வீட்டு வாடகை அதிகமாக உள்ளது. அங்கு, ஒரு நடுத்தர குடும்பம் வாழ்வதற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது 35,887 ரூபாய் தேவைப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
வாழ முடியாத நகரமாக மாறிய பெங்களூரு:
பெங்களூருவில் நிலைமை இப்படியிருக்க சமீப காலமாகவே அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பால், டீசல், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது நடுத்தர மற்றும் ஏழை மக்களை வெகுவாக பாதித்தது.
கடந்த ஏப்ரல் மாதம், பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. பின்னர், மின்சார கட்டணம் (Fixed Charges) 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே, பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவற்கான அதிகபட்ச கட்டணம் 60 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும், ஸ்மார்ட் கார்டுகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை 50 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
உயர்கிறது ஆட்டோ கட்டணம் - Auto Fare Hike
இந்த நிலையில், பெங்களூருவில் ஆட்டோ கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் 30 ரூபாயில் இருந்து 36 ரூபாயாகவும் அடுத்தடுத்த கிலோமீட்டருக்கான கட்டணம் 15 ரூபாயில் இருந்து 18 ரூபாயாக உயர்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்தது. குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும், அடுத்தடுத்த கிலோமீட்டருக்கான கட்டணத்தை 20 ரூபாயாகவும் திருத்த வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர்.
பொதுவாக, எரிபொருள் விலை, நகரத்தின் போக்குவரத்து நிலைமை மற்றும் பயணிகளின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படும். இதுதொடர்பான பரிந்துரைகளை மாவட்ட போக்குவரத்து ஆணையமே (DTA) வழங்கும்.
விரைவில் வெளியாக உள்ள ஷாக் அறிவிப்பு:
இதன் உறுப்பினர்களாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் (RTOs) அதிகாரிகள், துணை காவல் ஆணையர்கள் (போக்குவரத்து) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இருப்பார்கள். ஆனால், கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை மாவட்ட போக்குவரத்து ஆணையத்தின் தலைவராக உள்ள பெங்களூரு நகர்ப்புற துணை கமிஷனரே எடுப்பார்.
ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக பெங்களூரு நகர்ப்புற துணை கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், பெங்களூரு நகர்ப்புற துணை கமிஷனராக உள்ள ஜி. ஜெகதீஷா, அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. பெங்களூரு சின்னசாமி மைதானம் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை அவர் விசாரித்து வருவதாகவும் அந்த பணி முடிந்த உடன் ஆட்டோ கட்டணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் ரூ.40 மற்றும் ரூ.20 ஆக இல்லாவிட்டால், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், ஆதர்ஷ் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் போன்ற ஆட்டோ தொழிற்சங்கங்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளன.