தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரின் அருகே உள்ள மயிலாடும் பாறையிலிருந்து சிறிய தொலைவில் அமைந்து உள்ளது தங்கம்மாள்புரம் என்னும் கிராமம். மூங்கிலாறு எனப்படும் தங்கம்மாள்புரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பொட்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் யானைகுத்தி பட்டான் என்ற நடுகல் உள்ளது. பண்டைய காலத்தில் இங்கு யானைகள் அதிகமாக வாழ்ந்து இருக்கக் கூடும் என்பதை இது உணர்த்துகிறது.



யானைகளால் விளைநிலங்களுக்கும், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில் தந்தத்திற்காக வேட்டையாடும் போது அதனுடன் போர் செய்து வீரமரணம் அடைந்திருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விலங்குகளுடன் போரிட்டு இறந்த வீரனின் நினைவாக நடுகல் அமைக்கப்படுவது வரலாற்று மரபாகும்.


மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மூத்தகுடி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் குறித்த பொருள்களும், பண்டைய கால மக்களின் வாழ்வாதாரங்களை எடுத்துக்காட்டும் விதமாகவும் கல்வெட்டுகள், சிற்பங்கள் என தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் நடுகல். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் கல்வெட்டுகள், படைப்புச் சிற்பங்கள் என தொல்லியல் பறைசாற்றுவதாக பல வரலாற்று சுவடுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாக ஆய்வாளர்கள் பார்ப்பது நடுகற்கள் தான்.   இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள புள்ளி மான் கோம்பை எனும் சிற்றூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவின. 



தற்போது இங்கு 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கூறும், யானையுடன் போரிட்டு இறந்த வீரனுக்கு நினைவு செலுத்தும் வகையில் யானைகுத்தி பட்டான் என்ற நடுகல் உள்ளது . இந்த கல்லில் தன்கையில் எந்தவித ஆயுதமும் இன்றி யானையுடன் வீரன் போரிடுவது போன்ற படைப்பு சிற்பங்கள் வெட்டப்பட்டிருக்கிறது. அதன்கீழ் வீரன் தனது 2 மனைவிகளுடன் அமர்ந்த நிலையில் உள்ளது. இதன்மூலம் அந்த காலத்திலேயே வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்ந்துள்ளனர் என்பது இந்த நடுகற்கள் மூலம் தெரியவந்துள்ளது.



இதே போல  பிற்கால பாண்டிய காலத்தில் அழநாடு என்று அழைக்கப்பட்டு வந்தது தேனி மாவட்டம். அதன்படி ஓரமில் என்ற பெயருடைய இன்றைய மயிலாடும்பாறை என்ற ஊரில் இருந்து 10 கி.மீ தொலைவில் மலைகளால் சூழ்ந்த வெம்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படும் நெடுங்கல் அல்லது குத்துக்கல் ஒரே இடத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்த  நெடுங்கற்கள் பண்டைய காலத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் எழுப்பப்படும் ஈம நினைவுச் சின்னமாகும். இந்த சின்னங்கள் குறித்து சங்க இலக்கியங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இயற்கையாக ஒழுங்கற்ற பெரிய உயரமாக செதுக்கப்பட்ட கற்களை கொண்டு இந்த நினைவு சின்னங்கள் அமைக்கப்படும்.




வெம்பூர் கிராமத்தில் ஒரே இடத்தில் அதிகளவில் நெடுங்கற்கள் காணப்படுகின்றன. வரலாற்று சான்றுகளை எடுத்துகூறும் இதுபோன்ற அரியவகை கற்கள் மற்றும் சிற்பங்கள் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் சிதிலமடைந்து வருகிறது. எனவே தொல்லியல் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்தால் கீழடி போன்ற பல அரிய தமிழர்களின் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


 


https://bit.ly/2TMX27X