Just In




பட்டுக்கோட்டையில் கிரெடிட் கார்டு மூலம் 75 ஆயிரம் பணம் மோசடி
டாஸ்க்கை முடித்தால் பணம் வந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் மணிகண்டன் மர்மநபர் தெரிவித்த வங்கி கணக்கில் 2.03 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வினோத் பிரகாஷ் (42). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வினோத் பிரகாஷ் செல்போனுக்கு அவரது கிரடிட் கார்டு சம்பந்தமாக OTP வந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த கார்டில் இருந்து 25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் உடனே வந்துள்ளது. குறுந்தகவல் வந்ததை அவர் பார்க்கவில்லை. தொடர்ந்து இருமுறை ஓடிபி வந்துள்ளது. தொடர்ந்து அவர் கிரெடிட் கார்டு வைத்துள்ள வங்கி கஸ்டமர் கேரில் இருந்து வினோத்தை தொடர்பு கொண்டு உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து 75 ஆயிரம் பணம் உடனடியாக டிரான்சக்சன் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
ஓ.டி.பி. நம்பரை தான் யாருக்கும் தெரிவிக்காத நிலையில் எப்படி இந்த மோசடி நடந்தது என்று தெரியாமல் வினோத் பிரகாஷ் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தை சேர்ந்த வாலிபரிடம் ஆன்லைனில் பார்ட் டைம் வேலை என்று கூறி ரூ.2.21 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பட்டீஸ்வரம் ராஜகோபால் நகரை பரமசிவம் மகன் மணிகண்டன் (27). இவரது செல்போனுக்கு கடந்த அக்டோபர் 30ம் தேதி ஒரு வாட்ஸ் அப் மெசேஸ் வந்துள்ளது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மெசேஜில் குறிப்பிடப்பட்டிருந்த லிங்கை மணிகண்டன் ஓபன் செய்தார். அதில் 100க்கு ரீசார்ஜ் செய்து கொடுத்தால் கமிசன் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில் மணிகண்டன் ரூ.100-க்கு ரீசார்ஜ் செய்தார். தொடர்ந்து அவருக்கு பணி குறித்து ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக முடித்தால் அவரது கணக்கிற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வந்துள்ளது. இவ்வாறு ஆன்லைனில் அவர்கள் கொடுத்த டாக்ஸ்கை முடித்த வகையில் சில முறை பணம் வந்துள்ளது.
இதையடுத்து தொடர்ச்சியாக அவர்கள் பணி குறித்த சில டாஸ்க்குகள் கொடுத்துள்ளனர். இதனால் மணிகண்டன் அதில் முதலீடு செய்ய ரூ.18 ஆயிரத்து 160 ஐ மர்மநபர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இதையடுத்து அவருக்கு பல பணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு கொடுப்பதாக கூறிய பணம் வரவில்லை. இதையடுத்து குறிப்பிட்ட செல்போன் எண்ணில் மணிகண்டன் தொடர்பு கொண்ட போது டாஸ்க்கை முடித்தால் பணம் வந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் மணிகண்டன் மர்மநபர் தெரிவித்த வங்கி கணக்கில் 2.03 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார்.
இவ்வாறு மணிகண்டன் 2.21 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் மணிகண்டனுக்கு எவ்விதத்திலும் பணம் வந்து சேரவில்லை. பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட போதும் கொடுத்த பணியை முழுமையாக முடித்தால்தான் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி மணிகண்டன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.