கூலித் தொழிலாளி முத்து கொலை செய்து வீட்டின் அருகே புதைக்கப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து. முத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முத்து வீட்டிற்கு வராததால் மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்துவை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் போலீசார் முத்துவை பல இடங்களில் தேடி வந்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முத்துவின் வீட்டிற்கு அருகில் குழி தோண்டப்பட்டது போல தடயம் இருப்பதாக போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து முத்துவின் வீட்டின் அருகில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இடத்தை தோண்டினர். அங்கு முத்துவின் உடல் புதைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. காணாமல் போனதாக கூறிய முத்து, வீட்டின் அருகே கொலை செய்து புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துவை கொலை செய்தது யார்? குழி தோண்டி புதைத்தது யார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொலையான முத்துவின் மனைவி மாரியம்மாளின் சகோதரர் மூன்றாம் பாலினத்தவரான வைஷ்ணவி இருதினங்களாக வீட்டிற்கு வராமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வைஷ்ணவியை தேடி வருகின்றனர். கூலித் தொழிலாளி முத்து கொலை செய்து வீட்டின் அருகே புதைக்கப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.