ஆபரேஷன் சிந்தூர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்  எல்லையில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவில் 24 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் இந்தியா 25 ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடைபெற்ற இந்த தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 80 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், இந்த தாக்குதலில் தங்கள் நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது. தீவிரவாதிகள் முகாம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியாக இந்தியா கூறினாலும், பாகிஸ்தானில் உள்ள வழிபாட்டு தலங்களை இந்திய ஏவுகணைகள்  சேதப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தியா பாகிஸ்தான் போர்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்தியாவின் தாக்குதலை உணர்வுப்பூர்வமாக ஆதரித்தும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியும் வருகிறார். மற்றொரு பக்கம் இந்த தாக்குதல் இந்தியா பாகிஸ்தான் இடையில் கடும் போரை துவக்கி வைப்பதற்கான முன்னெடுப்பாக அமைந்துள்ளது. இரு நட்டின் இடையிலான போரில் கொல்லப்படப் போவது அப்பாவி ஜனங்கள் தான் என்பதை சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதுகுறித்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நாய் மாதிரி குரைக்காதீர்கள் - பவன் கல்யாண் 

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பவன் கல்யாண் திரைபிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் " இந்த தாக்குதலுக்கு எதிராக  பேசுபவர்கள் அல்லது தேச விரோத கருத்துகளை பகிர்பவர்கள்  திரைத்துறையை சேர்ந்தவர்கள் அல்லது சமூக ஊடக பிரபலங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . சிந்தூர் தாக்குதலுக்கு எதிராக தேச விரோத போக்குகளை கடைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபியிடம் பேசியிருக்கிறேன். தேசத்திற்கு உள்ளிருந்தோ வெளியில் இருந்தோ பேசப்படும் எதிர் கருத்துக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக தங்களை சோசியல் மீடியா பிரபலங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்திய ராணுவத்தைப் பற்றி கருத்து சொல்லாதீர்கள். இந்த நாட்டில் எல்லையை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு ஏபிசி கூட தெரியாது. தேசிய பாதுகாப்பு பற்றி எதுவும் தெரியாமல்  நாய் குரைப்பது போல் குரைக்காதீர்கள். ஒட்டுமொத்த தீவிரவாதிகளை துடைத்து எடுப்பது வரை ஒட்டுமொத்த நாடும் பாஜக அரசுடனும் மோடியுடனும் சேர்ந்து நிற்கும். " என பவண் கல்யாண் தெரிவித்துள்ளார்