நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட தனியார் பள்ளி மாணவிகள் 60  பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் நேரில் ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் குருகுலம் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 1500-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். மாணவிகள் தங்கிப் படிப்பதற்கான    விடுதியில் 6ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 150க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை விடுதியில் காலை உணவு சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களில் 60 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. காலையில் சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் பள்ளியின் உடல்கள் கடந்ததாக மாணவிகள் கூறியுள்ளனர். உடனடியாக விடுதி ஊழியர்கள் பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

 


 



 

அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலை சமைக்கப்பட்ட கோதுமை உப்புமாவில் விஷத்தன்மையுள்ள பூச்சிகள் ஏதேனும் விழுந்து உள்ளதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் ஜவகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மாணவிகளை நலம் விசாரித்ததோடு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் தெரிவித்தார். 

 

பின்னர், பள்ளிகளுக்கும் விடுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார் எஸ்.பி. ஜவகர். இந்நிலையில் வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் உடல்நலம் தேறியதால் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல்நலம்  பாதித்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.