வேதாரண்யம் அருகே கத்திரிப்புலத்தில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்த போது அந்த வழியே வேகமாக வந்த அப்சி என்ற தனியார் மினி பேருந்து, அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க நிறுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ்க்கும் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் 15 பேரை பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக மீட்டு வாகனத்திலேயே முதலுதவி செய்தனர். பின்னர், அரசு வேதாரண்யம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனுசியா என்ற கல்லூரி மாணவி பேருந்தின் அடியில் சிக்கி காலில் பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து போன்ற அவசரகால நேரங்களில் அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் துரிதப் பணியில் ஈடுபட வேண்டுமே தவிர வேடிக்கை பார்ப்பதாக நினைத்துக் கொண்டு மீட்பு பணியின் போது இடையூறு செய்ய வேண்டாம் என பணியில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக ஓட்டும் வாகன ஓட்டுனர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோல விபத்துக்களை தடுக்க முடியும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்