மத்திய அரசின் அறிவுரை அடிப்படையிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாப்படுகிறது. பல மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வழக்கம்போல் இல்லாமல், வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று அந்தந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளன. அத்துடன், விநாயகர் சிலைகள் வைத்து கோலகலமாக கொண்டாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.




இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு, “விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. மத்திய அரசின் அறிவுரை அடிப்படையிலே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு சுட்டிக்காட்டியதால் ஊர்வலம், கூட்டமாக சேர்ந்து கொண்டாட தடை விதித்துள்ளோம்” என்று பதிலளித்தார்.


Vinayagar Chathurthi 2021: அரசியல் சதுர்த்தியாகும் விநாயகர் சதுர்த்தி..வரலாறு சொல்வது என்ன?


தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் குறைந்தது 10 லட்சம் வாழ்த்து அட்டைகள் முதலமைச்சருக்கு அனுப்ப முயற்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் நாகராஜன், மாநில துணைத் தலைவர் எம்என் ராஜா, விபி துரைசாமி மாநிலச் செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், டால்பின் ஸ்ரீதர், தேசிய செயற்குழு உறுப்பினர்  முரளி யாதவ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


முன்னதாக, அண்டை மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுக்கும்போது தமிழ்நாட்டில் மறுப்பது ஏன்? என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.


கடவுள் சிலை செய்வது சட்டப்படி குற்றமா? தமிழர்கள் விருப்பமான கடவுளை வழிபட அனுமதி வேண்டும்? எனக் கேள்விஎழுப்பிய அவர், பாஜகவின் சார்பில் ஒரு லட்சம் வீடுகளின் வாசலில் விநாயகர் சிலை வைத்து அகவல் பாடி வழிபடவுள்ளோம் என்றும், நம் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம் எனவும் கூறியிருந்தார்.


''கேரளா போல நடந்துவிடக்கூடாது'' விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின்!