சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடங்களில் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறைப்பு
’’மொத்த கட்டணத்தில் இருந்து 600 ரூபாயை குறைத்து 3400 ரூபாய் செலுத்தினால் போதும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்’’
Continues below advertisement

கொரோனா பரிசோதனை நிலையம்
ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதிகளிக்கு செல்லக்கூடிய பயணிகள் பயணம் செய்யும் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்றுடன் வர வேண்டும் என அந்த நாடு நிபந்தனை விதித்து உள்ளது. இந்த நிலையில் கொச்சி போன்ற விமான நிலையங்களில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு வசதியாக கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு பயணத்திற்கு முன்பாக கொரோனா சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைத்து சான்று வழங்க வேண்டும் என்று துபாய் செல்லும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பன்னாட்டு முனையத்தில் அதிநவீன வசதியுடன் கூடிய ஆர்.டி.பி.சி.ஆர். மையம் அமைக்க உத்தரவிட்டார். இந்த நவீன பரிசோதனை மையம் கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான முனையத்தில் செயல்பாட்டிற்கு வந்தது. இங்கு ரேபிட், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் மூலம் பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ளும் வண்ணம் 3 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
அதன்படி, 8 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு அறிந்து கொள்ள 900 ரூபாயும், 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள 2,500 ரூபாயும், 30 நிமிடத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள 4 ஆயிரம் ரூபாயும் பயணிகளிடம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கட்டாயமாக 4 ஆயிரம் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் 30 நிமிடத்தில் முடிவு தெரிய நிர்ணயிக்கப்பட்ட 4 ஆயிரம் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளிம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, மொத்த கட்டணத்தில் இருந்து 600 ரூபாயை குறைத்து 3400 ரூபாய் செலுத்தினால் போதும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போது 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை கவுண்டர்கள் குறைவாக இருப்பதால், கவுண்டர்களை அதிக படுத்த வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.