Vinayagar Chathurthi 2021: அரசியல் சதுர்த்தியாகும் விநாயகர் சதுர்த்தி..வரலாறு சொல்வது என்ன?

Continues below advertisement

Vinayagar Chathurthi 2021: செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டாலே இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிடும். சர்ச்சைகளும் தான். இந்த ஆண்டு மட்டும் விதிவிலக்கா என்ன. விநாயகர் சதுர்த்தியை மையப்படுத்தி இந்த ஆண்டு சர்ச்சை ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி பொதுவழிபாட்டிற்கும், சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், ஊர்வலம் செல்லவும் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.

பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டவைகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த கடந்த ஆண்டு அனுமதி கேட்டு வந்த நிலையில் தமிழக அரசு மறுத்துவிட்டது. கொரோனா 3வது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலங்கள் செல்லவும் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு கடந்த ஆண்டைப்போல அல்லாமல் இந்த ஆண்டு எதிர்வினை கொஞ்சம் காட்டமாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதற்கு பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன் கடந்த ஆண்டு ஒதுங்கிக் கொண்டார்.

இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப்போலவே கொரோனா பரவலை காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நிச்சயமாக நடக்கும்; விநாயகரை கையில் எடுத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால், அதே விநாயகர் திமுக அரசு முடிவுக்கு வருவதற்கு காரணமாக இருப்பார் என்று கூறியிருக்கிறார் தற்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை. இப்படி காட்டமாக அண்ணாமலை பேசியிருப்பதற்கு காரணம், தடைவிதித்திருப்பது ஸ்டாலின்.

மத நம்பிக்கை விஷயத்தில் “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற கொள்கையைக் கொண்டிருந்தாலும் பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள் அதை ஒரு கடவுள் மறுப்பு கட்சியாகவே நினைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தை மட்டும் வெறுக்கும் கட்சியாக நினைக்கின்றது. கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லும் அதன் தலைவர்கள் இந்து மதப்பண்டிகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதை இப்போது வரை ஒரு குறையாக சொல்லிக்கொண்டிருக்கின்றனர் வலதுசாரி அபிமானிகள்.

கடந்த 2014ம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லியிருந்தார் ஸ்டாலின். இதனால் இடதுசாரியினர் அதிர்ச்சியும், வலதுசாரியினர் ஆச்சரியமும் அடைய, மறுநாளே இது அட்மினின் வேலை; ஸ்டாலினுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திமுக தரப்பிடமிருந்து அறிக்கை வந்தது. வாழ்த்து சொல்லாமல் இருந்திருந்தால் வழக்கம் போல கடந்திருப்பார்கள்; ஆனால், வாழ்த்து சொல்லிவிட்டு பதிவை அழித்து, வாழ்த்து சொன்னதை மறுத்தது வலதுசாரியினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. இப்போது, ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேறு. கொரோனா தினசரி எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும் நிலையிலும் விநாயகர் சதுர்த்திக்கு தடைவிதித்திருப்பதை இந்து மதத்தை திமுக தொடர்ந்து புறக்கணிப்பதாகவே கருதுகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியை சாஃப்ட் கார்னரோடு அனுகிய வலதுசாரி கட்சிகள், ஸ்டாலினிடம் ஆவேசம் காட்டுகின்றன. “விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு, இந்த அரசுக்கும் நிர்வாகத்திற்கும் நல்ல புத்தியைக் கொடு” என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறது இந்து முன்னணி. தடையை விலக்கிக்கொள்ளாவிட்டால் இதை சட்டரீதியாக சந்திப்போம் அல்லது அரசின் உத்தரவை எதிர்த்து சிலைகளை நிறுவுவோம் என்று எச்சரித்திருக்கிறது இந்து மக்கள் கட்சி. பக்ரித் கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்காத தமிழ்நாடு அரசு, தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்தவ விழாவிற்கு அனுமதி கொடுத்ததோடு உள்ளூர் விடுமுறையும் அளித்த தமிழ்நாடு அரசு, இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் தடைவிதிக்கிறது என்றால் இது இந்துக்களுக்கு எதிரான செயல்தானே என்கின்றனர் இந்து அமைப்பினர். அதோடு, திமுகவினர் முருகனை அவமதித்ததாகக் கூறி வேல் யாத்திரை நடத்தினார் எல்.முருகன். தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு ஏதாவது செய்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறது.

அதற்கு, இந்த விநாயகர் சதுர்த்தி தடையை பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் பார்க்கிறார் அண்ணாமலை. நாங்கள் என்ன வேண்டுமென்றா செய்கிறோம்; விழாக்காலங்களில் பொதுமக்கள் கூடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது அதைத்தான் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்; பாஜக ஆளும் கர்நாடகாவிலும் தான் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது அதை எதிர்த்து பாஜகவினர் ஏன் போராடவில்லை என்று விளக்கமளித்திருக்கிறது திமுக தரப்பு.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை காதும் காதும் வைத்தார் போல நடந்து வந்த விநாயகர் சதுர்த்தி, தற்போது அரசியல் சதுர்த்தியாக உருவெடுத்திருக்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விநாயகர் சதுர்த்தி அரசியலை பொறுமையாக கொழுக்கட்டையும், கொண்டைக்கடலையும் தின்றவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் பொதுமக்கள். விநாயகரும் தான்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram