தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 10-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால், தமிழ்நாடடில் கொரோனா பரவல் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பாக, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில பேசியதாவது,

Continues below advertisement

“ நயினார் நாகேந்திரன் விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதற்கு அனுமதி தர வேண்டுமென்று ஒரு கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார்.  நான் ஒரு விளக்கத்தை அவருக்கு மட்டுமின்றி, மன்றத்தில் உள்ள அனைவருக்கும், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அதிளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கத் தேவையான கட்டுப்பாடுகளை 30-9-2021 வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டு காட்டியிருக்கிறது.

கேரள மாநிலத்திலே ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தினால்தான், அங்கே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முழுமையாக தடுக்கப்படவில்லை. அங்குமிங்கும் கொஞ்சம் இருக்கிறது.

அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50 ஏறுகிறது. 50 குறைகிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. ஆகவேதான், பொதுமக்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனை கருத்திலே கொண்டு, 15.9.2021 வரை அனைத்து சமய விழாக்கள் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொருந்தும்.

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழாக் கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் தவிர, தனி நபர்களை பொறுத்தவரையில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் இல்லங்களில் கொண்டாடலாம் என்று அரசு சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை மனதிலே கொண்டுதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

இதையொட்டி, நான் இன்னொரு அறிவிப்பையும் நான் இங்கே வெளியிட விரும்புகிறேன். நமது மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக்காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடரந்து வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுள், சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்ற ஆண்டும், இந்தாண்டும் கொரோனா தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில் அவர்கள் வாழ்வாதாரம் கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அந்த மாநில அரசு கருத்தில் கொண்டு, இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால பாதிப்பு நிவாரணத் தொகை போக கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். “

இவ்வாறு அவர் பேசினார்.