தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுதியது தமிழக அரசு. இதனால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ரயில் சேவையும் பயணிகளின் வரத்துக்கு ஏற்ப இயக்கப்பட்டது. பயணிகள் வருகை  இல்லை என்பதால் தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரயிலும் ஜூன் 15 வரை ரத்து செய்யப்பட்டது. மற்றொரு ரயிலான வைகையும் சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.இதனால் அத்தியாவசிய தேவைக்காக சென்னை செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.  இதனை அறிந்த தெற்கு ரயில்வே மீண்டும் நேற்று வைகை ரயிலை இயக்கியது. நேற்று இயக்கப்பட்ட வைகை ரயிலில் 942 பேர் மதுரையில் இருந்து சென்னை சென்றனர். அதில் ஏசி கோச்சில் 46 பேரும், செகெண்ட் க்ளாஸில் 896 பேரும் பயணம் செய்துள்ளனர்.


மேலும் ரயில்கள் குறித்த விவரம் தெரிவித்த அதிகாரிகள், பாண்டியன், முத்துநகர், ஆனந்தபுரி, பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி, பல்லவன் ஆகிய ரயில்கள் வழக்கபோல் இயக்கப்படுகின்றன. அதில் மாற்றமில்லை என்றனர்.




>>பாரம்பரியம், பழமைன்னு ஏமாத்துவாங்க.. போலியை நம்பவேண்டாம்.. எச்சரிக்கும் ராஜராஜன் !




இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரதாண்டவம் ஆடுகிறது. வயது வித்தியாசமின்றி பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படுகின்றன. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 30ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சற்று குறைகிறது. தமிழகத்தில் நேற்று 26 ஆயிரத்து 513 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலான கொரோனா பாதிப்பு 21 லட்சத்து 23 ஆயிரத்து 29ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 910 பேர் நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை, 31 ஆயிரத்து 673 பேர். இதுவரை 18 லட்சத்து 2 ஆயிரத்து 176 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.




தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றும் குறைந்தது. தொற்று குறைவு என்றாலும் உயிரிழப்பு அதே நிலையில் நீடிக்கிறது. கடந்த ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதுவரையிலான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது. 


நேற்று, ஊரடங்கு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாது. முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது பொதுமக்களின் கையில்தான் உள்ளது என தெரிவித்தார். ரயில் சேவைகள் இயக்கப்பட்டாலும் மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும், ஊரடங்கை முறையாக கடைபிடித்து கொரோனாவை விரட்டியடிக்க வேண்டுமென்பதுமே அரசின் கோரிக்கையாக உள்ளது. 




>> அனுமன் படம் இருந்ததால் ஆம்புலன்சில் ஏற மறுத்த தம்பதி உயிரிழப்பா? உண்மை இது தான்!