ஒருநாள் முழுவதும் இணையத்தில் காட்டுத்தீ போல் ஒரு புகைப்படமும் செய்தியும் பரவிக்கொண்டிருந்தது. 

ஹனுமன் ஸ்டிக்கர் இருந்த ஆம்புலன்ஸில் ஏற மறுத்ததால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி உயிரிழந்தனர் என்பதுதான் அந்த செய்தி. கூடவே, ஒரு ஆம்புலன்ஸின் புகைப்படமும் அருகில் சடலத்தின் புகைப்படமும் இருந்தது.

அந்தப் புகைப்படம் மத ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மக்கள் கட்சி அந்தச் செய்தியைப் பகிர்ந்து இது உண்மையா எனத் தெரியவில்லை உறுதிப்படுத்தவும் என பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தது.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தீவிர ஆதரவாளரான எம்.ஸ்ரீனிவாசலு ரெட்டியும் இந்தத் தகவலைப் பகிர்ந்து அதன் உண்மைத் தன்மையைக் கோரினர்.



பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் அது செய்தி அல்ல பொய்தி என்பது உறுதியானது. அந்தப் புகைப்படம் முதன்முதலாக இந்துஸ்தான் டைம்ஸ் இணைய பதிப்பில் வெளியாகியிருக்கிறது. உத்தராகண்ட் மாநிலத்தின் கொரோனா பாதிப்பு குறித்த செய்திக்கு அந்தப் படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புகைப்படம் ஏஎஃப்பி நிறுவனத்துக்குச் சொந்தமானது. அது பெங்களூருவில் எடுக்கப்பட்ட புகைப்படம். பெங்களூருவில் இயங்காத கிரானைட் குவாரியில் அமைக்கப்பட்ட தற்காலிக திறந்தவெளி மயானத்துக்குக் கொண்டு வரப்பட்ட கொரோனா நோயால் இறந்தவர்களின் சடலங்கள் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. புகைப்படத்திலிருந்த ஆம்புலன்ஸில் பிரசன்னா ஆம்புலன்ஸ் என எழுதப்பட்டிருந்தது. பிரசன்னா ஆம்புலன்ஸ் பெங்களூருவைத் தலையிடமாகக் கொண்டு இயங்குகிறது.

இப்படியிருக்க கேரளாவில் சம்பவம் நடந்ததாக போலி செய்திகள் பகிரப்பட்டு அது மத துவேஷத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற நிறுவனம் தான் இந்தச் செய்தி போலிச் செய்தி என்பதைக் கண்டறிந்தது. மேலும், செய்தியை இன்சார்ட்ஸ் வெளியிட்டதாகவும் சிலர் சுட்டிக்காட்டினர். அதுவும் உண்மையல்ல என்பதை ஆல்ட் நியூஸ் (Alt News) உறுதிப்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக ஆல்ட் நியூஸ் (Alt News) ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், ஹனுமன் ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால் ஆம்புலன்ஸில் ஏற மறுத்த கேரள தம்பதி உயிரிழந்தனர் என்ற செய்தி போலியானது. இன்ஷார்ட்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது போல போலியான ஒரு கிராஃபிக்ஸை உருவாக்கியிருக்கின்றனர்.



அண்மையில் ராஜஸ்தானைச் சேர்ந்த கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணுக்கு ஜனானா மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டது. மதத்தைக் காரணம் காட்டி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதனால் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் நடந்து குழந்தை இறந்துவிட்டதாகவும் ஒரு போலி செய்தி வெளியானது.

இந்த போலி செய்திக்கு பதிலாக இன்னொரு மததுவேஷத்தைக் கிளப்பும் வகையிலேயே, கேரள தம்பதியைப் பற்றிய இச்செய்தியும் உருவாக்கி வெளியிடப்பட்டிருக்கிறது. கொரோனாவைவிட மிகமிக ஆபத்தானது போலி செய்திகள். அதுவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் போலி செய்திகளைப் பற்றி எப்போதுமே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.