கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும்  2 -டி.ஜி மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு மருத்துவர் கோரிக்கை.


கொரோனா வைரஸ் தொடரின் இரண்டாம் அலை கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா முழுவதும் வேகமாக பரவி வந்தன, இதன் எதிரொலியாக மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது. இந்தியாவில் வரலாறு காண முடியாத அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடைவது என துயர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் குறைந்து இயல்பு நிலைக்கு நாடு திரும்பி வருகிறது. கொரோனா வைரஸ்  இருந்த மக்களை பாதுகாப்பதற்கு தற்போது தடுப்பூசி மட்டுமே ஒரே கருவியாக இருக்கிறது. இருந்தும் சில மருந்துகள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கு உதவி செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.



 

அந்தவகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திப்படி கோவிட்-19 தொற்றுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்க 2-டிஜி மருந்து  உதவுகிறது , கூடுதலாக ஆக்ஸிஜன் உதவியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் மருத்துவ சோதனை தரவுகள் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த மருந்து வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களில் குவிந்து, வைரஸ் தொகுப்பையும், அதன் ஆற்றல் உற்பத்தியையும் நிறுத்துவதன் மூலம் வைரஸின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களில் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட திரட்சிகளில் செயல்படுவது இந்த மருந்தை தனித்துவமாக்குகிறது என்று அரசாங்க செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இந்த மருந்து தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.



கடந்த ஆண்டு இந்த மருந்து நாடு முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வினோத் ஆதிநாராயணன் என்பவர் தலைமையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் இந்த மருந்தானது பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு மக்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மருந்து பொதுமக்களிடையே கொடுத்தபொழுது நல்ல பலன்கள் கிடைத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரம் இந்த மருந்து கொடுக்கும் பட்சத்தில் குணமடைந்து வீடு திரும்பினார்.



இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவர் வினோத் ஆதிநாராயணன் தெரிவிக்கையில், இந்த மருந்தானது கடந்த ஆண்டு முதல் சோதனை செய்யப்பட்டு வருகிறது . செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 30 நோயாளிகளிடம் பல்வேறு காலகட்டத்தில் ,இந்த மருந்து சோதனை செய்யப்பட்டது. அதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. குறைந்தளவு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சாதாரணமாக பத்து நாட்களில் குணமாகும் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்தால் மிக விரைவாக குணம் அடையும். 6 அல்லது 7 நாட்களில் அவர்கள் குணம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை பரிசோதனையின்போது நாங்கள் தெரிந்து கொண்டோம்.



இதேபோல் ஆக்சிஜன் அதிகளவு தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்தினை நோயாளிகளுக்கு அளிக்கும்போது அவர்களுக்கு குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது உள்ளிட்ட நல்ல மாற்றங்களை இந்த மருந்து நோயாளிகளுக்கு கொடுத்திருந்தது. .தற்போது இந்த மருந்தினை அரசாங்கம் அங்கீகரித்திருப்பதால் நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என தெரிவித்தார். மேலும் பேசுகையில் கடந்த வாரம் டெல்லி  மருத்துவமனையில் வெண்டிலேட்டர்  உதவியுடன் உயிர் பிழைத்து வந்த நோயாளிகள் உட்பட 20 நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் 19 நோயாளிகள் வைரஸ் தொற்றிலிருந்து முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த அளவிற்கு நல்ல பலன்தரும் இந்த மருந்தினை தமிழக அரசும் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறு அரசு இந்த மருந்தினை கொள்முதல் செய்யும்பொழுது  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என தெரிவித்தார். இதுகுறித்து தான் அரசுக்கு கடிதம் எழுதப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 



மருந்தில்லாமல் தத்தளிக்கும் நோயாளிகளுக்கு ஒளிவிளக்காக தெரியும் இம்மருந்தினை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது