கரூரில் சோதனைச் சாவடிகளில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழங்கி பாராட்டினார்.

                                                       


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நோயை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் பல்வேறு சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் சோதனைச் சாவடிகளில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரில் சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


ஒரு சோதனைச் சாவடிக்கு மூன்று காவலர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மனோகரா கார்னர் சோதனைச்சாவடியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தெரிவிக்கையில், 

                                                                         


கரூர் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 15 சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள காவலர்களை சிறப்பிக்கும் விதமாக கொரோனா தடுப்பு உபகரணங்கான முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு பரிசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனாவசியமாக வெளியே சுற்றும் வாகனம் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் கூடுதல் நடவடிக்கையாக தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் கரூர் நகர துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் மற்றும் கரூர் நகர காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.