தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. 


மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட் மற்றும் அதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்  குறித்து  ஒப்புதல் பெறப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்குவது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்கள், டைடல் பூங்கா, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. 


அதேசமயம் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியிருப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 


முன்னதாக கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு  தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி 2023- 24 ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், இறுதி கூடுதல் மானியக் கோரிக்கையும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். 


மேலும் நிதிநிலைஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், அலுவல் ஆய்வுக் குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.