பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும் - நிர்வாக அதிகாரி அனுமந்தாராவ் தகவல்.
மதுரை டைடல் பார்க்
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் டைடல் பூங்கா உருவாக்கி இருப்பதை போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மாட்டுத்தாவணி பகுதியில், டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில் மதுரை தோப்பூர் பகுதியில் கட்டப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் 2027-ஆம் ஆண்டு கட்டுமானப்பணிகள் முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுரை எய்ம்ஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தாராவ், விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர், தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார், அதிமுக ராஜ்யசபா எம்பி சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்த ராவ்..,”எய்ம்ஸ் தொடர்பான இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய துணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் 8 பேர் ஆன்லைன் மூலமாகவும் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எய்ம்ஸ் நான்காவது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் வாடகைக்கு கட்டடங்கள் எடுக்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணி விரைவாக தொடங்கப்பட்டு, பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதே போல் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடக்கக்கூடிய பணிகள் குறித்து ஆய்வும் நடைபெற்றது.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி
தற்போது மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், வரும் 2026 ஜனவரி மாதம் தை பொங்கல் தினத்தன்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி புதிய கட்டடத்தில் செயல்படும். இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான ஆய்வகங்கள் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் முதற்கட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 150 படுக்கைகளுடன் அனைத்தும் செய்து முடிக்கப்படும். 2027 ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று செயல்படுத்த தொடங்கும். மாதந்தோறும் கட்டடப் பணிகள் குறித்த புகைப்படங்களை வெளியிடும்படி ஒப்பந்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம்” எனவும் தெரிவித்தார்.
இதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, டைடல் பார்க், எய்ம்ஸ் மருத்துவமனை என பணிகள் அடுத்தது தயாராகி வருகிறது.