உணவு வீடியோக்களை பதிவிட்டு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் இர்ஃபான். பின்னர், தன்னுடைய யூ டியூப் சேனலில் பிரபலங்களையும் பேட்டி எடுத்து மேலும் பிரபலமானவர். சமூக வலைதளங்களில் மிகவும் முக்கியமான பிரபலங்களில் ஒருவராக உலா வரும் இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு இன்ப்ளூயன்சராகவும் ( சமூக வலைதள விளம்பரதாரராகவும்) செயல்பட்டு வருகிறார். இவரது யூ டியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.


பாலின விவகாரம்:


இவருக்கு ஆல்யா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், ஆல்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருவுற்றார். இந்த சூழலில், ஆல்யாவிற்கும் தனக்கும் பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்ற நிகழ்ச்சியை துபாயில் இர்ஃபான் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை என்ன? என்பதை சொன்ன இர்ஃபான் அதை வீடியோவாகவும் தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டார்.


இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தை பிறப்பதற்கு முன்பே அது ஆணா? பெண்ணா? என்பது சட்டப்படி குற்றம் ஆகும். இதையடுத்து, இர்ஃபானுக்கு கண்டனங்கள் குவிந்தது. கண்டனங்கள் குவியவும் இர்ஃபான் அந்த வீடியோவை நீக்கிவிட்டு, இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டு இருந்தார். இர்ஃபானின் இந்த செயல் குறித்து விசாரணை நடத்த தமிழக சுகாதாரக் குழு 3 மருத்துவர்கள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.


இர்ஃபான் மீது நடவடிக்கையா?


இதையடுத்து, அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.  இதையடுத்து, இர்ஃபான் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கம் திருப்தியாக இருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க திட்டமில்லை என்றும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.