கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு யானை தந்தம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் கோயமுத்தூர் வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் அடங்கிய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு யானை தந்தம் கடத்தி வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர். அப்போது துடியலூர் பகுதியில் நின்றிருந்த குழுவினர் சந்தேகப்படும்படியாக வந்த பொலீரோ ஜீப்பை மடக்க முயன்றனர். அப்போது வனத்துறை வந்த காரை இடித்து விட்டு பன்னிமடை வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். இதனை தொடர்ந்து மற்ற குழுக்களில் இருந்தவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பொலிரோ வாகனத்தை வனத்துறையினர் சேசிங் செய்தனர். அந்த வாகனம் தடாகம் வீரபாண்டி அருகே வரும் போது வனத்துறையினரால் மடக்கி நிறுத்தப்பட்டது.
வனத்துறையினர் விசாரணை
பின்னர் அந்த வாகனத்தில் வந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து யானை தந்தம் கடத்தி வந்ததாகவும், அதனை கோவையில் உள்ள ஒருவருக்கு விற்க முடிவு செய்திருந்த நிலையில் வனத்துறையினர் தங்களை அடையாளம் கண்டு கொண்டதால் அவர்களிடம் இருந்து தப்பி செல்லும்போது சாலை ஓரத்தில் யானை தந்தத்தை வீசி சென்றதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கு யானை தந்தம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பிதர்காடு பழங்குடியினர் சங்கத்தின் செயலாளராக உள்ள சங்கீதா தலைமையில் நீலகிரியில் இருந்து யானை தந்தத்தை கடத்தி வந்ததும், இதனை கோவையில் உள்ள ஒருவருக்கு விற்க முடிவு செய்ததும் தெரியவந்தது.
மேலும் காவல் துறையினர் மற்றும் வனத்துறை சோதனை செய்தால் தப்பிக்க யானை தந்தத்தை பொலிரோ ஜீப் என்ஜின் பகுதியில் மறைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து யானை தந்தம் கடத்தி வந்த கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த சர்வேஷ், கூடலூர் பிதர்காடு பகுதியை சார்ந்த சங்கீதா, கோவை இடையர்பாளையம் பகுதி சேர்ந்த விக்னேஷ், வெள்ளலூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் நாகமாநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்த அருள் அரோக்கியம் மற்றும் பாலமுருகன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் 6 பேரையும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து யானை தந்தம் எங்கு உள்ளது, அதை யாருக்கு விற்க முடிவு செய்தனர், அவர்களின் பின்னணி உள்ளிட்டவை குறித்து அறிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வனத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.