இந்தியாவில் வாழும் ஒரு குடிமகனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஆதார் அட்டை மாறியுள்ளது. ஒரு குடிமகன் வங்கி கணக்கு எண் தொடங்க, சிலிண்டர் சேவை பெற, செல்போன் சிம் கார்டு வாங்க, வங்கியில் கடன் வாங்கி, அரசு சேவைகள் பெற, ஓட்டுநர் உரிமம் பெற அனைத்து விதமான சேவைகளுக்கும், தேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. 

Continues below advertisement

இந்த நிலையில், ஆதார் அட்டை குறித்து பொதுமக்களுக்கு அடிக்கடி எழும் கேள்விகளும், அதற்கான பதில்களையும் கீழே காணலாம். 

1. கேள்வி: ஆதார் அட்டையில் உள்ள தரவுகளை எத்தனை தடவை புதுப்பிக்கலாம்? 

Continues below advertisement

பதில் : ஆதார் அட்டையில் உள்ள நமது பெயரை வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். பாலினத்தை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். பிறந்த தேதியையும் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். 

2. கேள்வி: ஆதார் அட்டையில் பெயரில் திருத்தம் செய்வது எப்படி?

பதில் : ஆதார் அட்டையில் உங்கள் பெயரில் திருத்தங்கள் அல்லது மாற்றம் செய்ய அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். 

3. கேள்வி : ஆதார் அட்டையில் முகவரி புதுப்பிப்பிற்கு என்ன தேவைப்படும்?

பதில்: புது முகவரிக்கான அத்தாட்சியான தண்ணீர் கட்டணம், மின்கட்டணம், சிலிண்டர் கட்டயம், வங்கி கணக்கு எண், வாடகை ஒப்பந்தம் ஆகியவை தேவைப்படும். 

4. கேள்வி: ஆதார் அட்டை முகவரி புதுப்பிப்பிற்கு ஆவணங்களை எவ்வாறு சமர்ப்பிப்பது?

பதில்: புதுப்பிப்பு முகவரி ஆன்லைன் சேவையில் pdf அல்லது jpeg வடிவத்தில் ஆவணங்களை முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். அதை ஸ்கேன் செய்து ஆதார் இணையதளத்தில் கேட்கும் இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பாஸ்போர்ட், வாடகை மற்றும் சொத்து ஒப்பந்தம் போன்ற சில ஆவணங்களுக்கு பல பக்கங்களின் படம் தேவைப்படும். 

5. கேள்வி: ஆதார் இணைய வழி சேவை மூலமாக மொழியை புதுப்பிக்க முடியுமா?

பதில்: ஆதார் இணையவழி சேவை மூலமாக மொழியை புதுப்பிக்க இயலாது. 

6. கேள்வி: ஆதார் இணையதளம் மூலமாக பிறந்த தேதியை மாற்ற முடியுமா?

பதில்: முடியாது. பிறப்புச் சான்றிதழுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கே செல்ல வேண்டும். 

7. கேள்வி: ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஒரு முறை புதுப்பித்த பிறகு மீண்டும் புதுப்பிக்க முடியுமா?

பதில்: முடியாது. ஆனால், விதிவிலக்கான சூழ்நிலையில் மாற்றலாம். அதற்கு 1947 என்ற எண்ணை அழைக்க வேண்டும். 

8. கேள்வி: ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணைத் தொலைத்து விட்டால் என்ன செய்வது?

பதில்: கவலை வேண்டாம். ஆதாரில் பதிவு செய்த  எண்ணைத் தொலைத்து விட்டாலோ, மாற்ற எண்ணினாலோ அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு நேரில் செல்லவும். 

9. கேள்வி: புதுப்பிப்பு கோரிக்கைகளை எங்கே சரிபார்க்கலாம்?

பதில்: மை ஆதார் டேஷ்போர்டில் உள்ள கோரிக்கைகள் இடத்தில் ஒரு பயனாளர் தனது புதுப்பிப்பு கோரிக்கைகளை சரிபார்க்கலாம்.